திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 14 Jan 2022 3:47 PM GMT (Updated: 14 Jan 2022 3:47 PM GMT)

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

வைகுண்ட ஏகாதசி விழா

திருவள்ளூரில் புகழ் பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். 108 திவ்ய தேசங்களில் 59-வது திவ்யதேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த ஆண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியின்றி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வழிகாட்டி நெறிமுறைகள்

பூஜைகள் முடிந்த பின்னர் காலை 6.30 மணிக்கு வெள்ளி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜென்டு சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story