வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரம் திருட்டு


வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 15 Jan 2022 6:36 PM GMT (Updated: 15 Jan 2022 6:36 PM GMT)

பெரம்பலூர் அருகே வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 
பொங்கல் சீர்வரிசை...
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனபால். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு வனிதா, நந்தினி ஆகிய 2 மகள்களும், இளங்கோவன் (வயது 26) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி 2 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது. இளங்கோவன் பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள ஒரு கடையில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலையில் தனபாலும், ராஜலட்சுமியும் காட்டிற்கும், இளங்கோவன் விளையாடவும் சென்றுள்ளார். மதியம் இளங்கோவன் வீட்டிற்கு வந்து குளிக்க சென்றார். இதையடுத்து ராஜலட்சுமி வீட்டிற்கு வந்து தனது மகள்களுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக பொருட்களை தயார் செய்து, தட்டில் பணம் வைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
ரூ.56 ஆயிரம் திருட்டு
அப்போது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரமும், வெளியே அலமாரியில் 2 மணிபர்சுகளில் ரூ.2 ஆயிரமும், ரூ.4 ஆயிரமும் என மொத்தம் ரூ.56 ஆயிரம் திருட்டு போயிருந்தது கண்டு ராஜலட்சுமி அதிர்ச்சியடைந்தார். வீடு பூட்டப்படாமல் கதவு திறந்து கிடந்தது. மேலும், பீரோவின் சாவி அலமாரியில் இருந்ததால், மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் அலமாரியில் விரித்து போடப்பட்டிருந்த பத்திரிகையின் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மர்ம ஆசாமிகள் கண்ணில் படாததால், அந்த பணம் தப்பியது. இது தொடர்பாக இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பெரம்பலூர் அருகே லாடபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் லாடபுரம் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந்தேதி இரவு பொங்கல் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையன்று காலையில் வெங்கடேசன் வந்து கடையை திறந்து பார்த்த போது, கடைக்கு மேற் மேற்கூரையாக போட்டிருந்த கூலிங் ஷீட் பிரித்து இருந்ததும், மேலும் கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருந்தது. 
இது தொடர்பாக வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story