திருச்சி மாவட்டத்தில் 2 பேர் கொலை


திருச்சி மாவட்டத்தில் 2 பேர் கொலை
x
தினத்தந்தி 15 Jan 2022 8:52 PM GMT (Updated: 15 Jan 2022 8:52 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்

சமயபுரம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோவத்தகுடி குடிதெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 54). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கும், பாச்சூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த் என்கிற சப்பாணிக்கும்(29) இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பைஞ்சீலியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆனந்துக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே பாச்சூரில் உள்ள ஒரு கடையின் முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தை, பன்னீர்செல்வம் வாழைமரம் வெட்டும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்தின் நண்பர் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (32) தடுக்க முயன்றபோது அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே பன்னீர்செல்வம் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டிக் கொலை
நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரான கோபுரப்பட்டி பெருமாள் கோவில் அருகே வசிக்கும் மனோகர் (27) என்பவரிடம், ஆனந்த் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஆனந்த் மற்றும் மனோகர் ஆகிய இருவரும் கோபுரப்பட்டி வழியாக வீட்டிற்கு சென்ற பன்னீர்செல்வத்தை அங்குள்ள பெருவளை வாய்க்கால் பாலம் அருகே வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள மனோகரை தேடி வருகிறார். 
மற்றொரு இடத்தில் கொலை
இதேபோல, திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சபெருமாள்பட்டியிலிருந்து ஆர்.கோம்பை செல்லும் வழியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி பழனியம்மாள்(50), மகன் மணிகண்டன் (29). ஆறுமுகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியே வசித்து வருகின்றனர். ஆறுமுகத்திற்கும், அவரது சகோதர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட சொத்து தகராறில் தாய் பழனியம்மாளை ஆறுமுகம் தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஆறுமுகத்தின் தம்பி முருகேசனின் மகன் மருதுபாண்டிக்கும் (28), ஆறுமுகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்த தகவலின்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், முசிறி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மருதுபாண்டி தனது உறவினர்களுடன் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர், ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசாதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முடுக்கி விடப்பட்டது. இந்தநிலையில் மருதுபாண்டிக்கு உதவிய அவரது உறவினர்களான கோம்பை கருங்காட்டைச் சேர்ந்த மணியரசன் (30), நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருதுபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story