ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்


ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 19 Jan 2022 3:09 PM GMT (Updated: 2022-01-19T20:39:22+05:30)

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 யானைகள் பசுமாட்டை மிதித்துக்கொன்றது.

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த 2 யானைகள் பசுமாட்டை மிதித்துக்கொன்றது. 
யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கிருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. சில நேரம் ஊருக்குள்ளும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இந்தநிலையில் ஊருக்குள் புகுந்த யானைகள் பசுமாட்டை மிதித்துக்கொன்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தாளவாடி அருகே உள்ள மல்லன்குழியை சேர்ந்தவர் புட்டுசித்தா (வயது 60). இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு தூங்க சென்று விட்டார்.
மாட்டை மிதித்துக்கொன்றன
நேற்று அதிகாலை மாட்டு் கொட்டகையில் இருந்து மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வீட்டு்க்குள் தூங்கிக்கொண்டிருந்த புட்டுசித்தா திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே சென்று பார்த்தார். அங்கு 2 யானைகள் நின்று கொண்டு இருந்தன. அங்குள்ள மாட்டுக்கொட்டகையின் சுவரை துதிக்கையால் சாய்த்தும், காலால் மிதித்தும் தள்ளின. அங்கு கட்டப்பட்டு இருந்த மாடுகள் அங்குமிங்கும் மிரண்டன. அதில் பசுமாடு ஒன்றை யானைகள் காலால் மிதித்தன. இதில் அந்த மாடு இறந்து விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டு்ம் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் அங்கிருந்து சென்றன.
 இதுபற்றி கிராம மக்கள் ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த யானைகள் தற்போது ஊருக்குள் புகுந்து மாட்டை கொன்றுள்ளது. இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. யானைகள் மனிதர்களை தாக்கும் முன்பு  வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் அகழி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்த பசு மாட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டு்ம்.’ என்றனர்.

Next Story