கழுத்தை இறுக்கியும், மூச்சை திணறடித்தும் 4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மணவாளக்குறிச்சி,
கழுத்தை இறுக்கியும், மூச்சை திணறடித்தும் 4 வயது சிறுவனை கொடூரமாக கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சிறுவன் மாயம்
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. இவருடைய மனைவி சகாய சில்ஜா (வயது 28). இவர்களுடைய மகன் ஜோகன் ரிஷி (4).
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மதியம் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜோகன் ரிஷியை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் காணாததால் தாய் சகாய சில்ஜா அதிர்ச்சி அடைந்தார்.
பெண் மீது சந்தேகம்
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். சிறுவன் அணிந்திருந்த 1½ பவுன் நகைக்காக அவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சிறுவன் மாயமான சம்பவத்தில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
மறுநாளும் போலீசார் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சகாய சில்ஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோபின் மனைவி பாத்திமாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதேபோல் கிராமத்தை சேர்ந்தவர்களும் அந்த பெண்ணை கண்காணித்ததில் அவர் வெளியூர் சென்றது தெரியவந்தது.
பீரோவில் சிறுவன் உடல்
பின்னர் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை பிடித்து விசாரித்த போது, நகைக்காக சிறுவனை கொன்று உடலை வீட்டு பீரோவில் அடைத்து வைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணின் வீட்டை சூறையாடினர். மேலும் குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பீரோவில் இருந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக பாத்திமாவையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதே சமயத்தில் பாத்திமாவின் கணவர் சரோபினையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்தநிலையில் கைதான பாத்திமா, சிறுவனை கொன்றது ஏன்? என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதாவது, பாத்திமா குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அடைக்க முடியாமல் அவர் சிரமப்பட்டுள்ளார். இதனால் கடன் கொடுத்த பெண், பாத்திமாவுக்கு நெருக்கடி கொடுத்தார். மேலும் பணத்தை தராவிட்டால் உன்னுடைய வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டலுக்கு பயந்த அவர் பணத்தை உடனடியாக திரட்டுவது எப்படி? என்று யோசித்தபடி இருந்துள்ளார். நமக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே இதற்கு மாற்று வழி என்ன? என நினைத்து கொண்டிருந்த போது, வீட்டின் முன்பு விளையாடிய சகாய சில்ஜா மகன் ஜோகன் ரிஷியை பார்த்தார்.
சிறுவன் அழுகை
சிறுவன் கழுத்தில் நகையும், கையில் கைச்சங்கிலியும் (பிரேஷ்லெட்) அணிந்திருந்ததை கவனித்தார். அடுத்த நிமிடமே நகையை பறித்து விட்டு கடனை அடைத்து விடலாம் என்ற முடிவை தேர்ந்தெடுத்தார். அப்போது ஆட்கள் யாரும் வருகிறார்களா? என கண்காணித்த அவர், சிறுவனிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபடி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
பாசமாக பேசும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தானே என நினைத்து சிறுவனும் சென்றான். அங்கு சென்ற உடனேயே பாத்திமா சுயரூபத்தை வெளிப்படுத்தினார். சிறுவனிடம் இருந்த நகை, கைச்சங்கிலியை பறித்ததும் அவன் மழலை குரலில் என்னுடைய நகையை தாங்க, அம்மா திட்டும் என அழுதான். ஆனால் சிறுவனின் அழுகை, அவளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கொடூர கொலை
இப்படியே விட்டால், நாம் மாட்டிக் கொள்வோம் என பயந்த பாத்திமா சிறுவனை கொல்ல துணிந்தார். அதன்படி சிறுவனின் வாயை துணியால் கட்டி சத்தம் போடாதபடி செய்தார். பிறகு கை, கால்களை கட்டிய அவர், கழுத்தை கயிறால் இறுக்கி உள்ளார். பாதி உயிர் போன நிலையில், உச்சபச்சமாக சிறுவனின் முகத்தில் தலையணையை போட்டு அதில் அவர் உட்கார்ந்து கொண்டார். பாத்திமாவின் ஈவு, இரக்கமற்ற கொலை வெறியில் சிறுவன் துடிதுடித்து இறந்தான்.