2 மாத குழந்தையை ரூ.80 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது


2 மாத குழந்தையை ரூ.80 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 6:38 PM GMT (Updated: 24 Jan 2022 6:38 PM GMT)

திருச்சியில் குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தால் ஏற்பட்ட ரூ.80 ஆயிரம் கடனை அடைக்க தான் பெற்றெடுத்த 2 மாத குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, ஜன.25-
திருச்சியில் குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தால் ஏற்பட்ட ரூ.80 ஆயிரம் கடனை அடைக்க தான் பெற்றெடுத்த 2 மாத குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடிப்பழக்கம்
திருச்சி உறையூர் கீழ பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது38). இவர் காந்தி மார்க்கெட்டில் தக்காளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கைருனிஷா.
இந்தநிலையில் அப்துல் சலாம் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் குடிப்பழக்்கத்துக்கு அடிமையாகி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த தம்பதிக்கு 2 மகனும், 2 மகளும் உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான கைருனிஷா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சூதாட்டத்தால் கடன்
ஏற்கனவே 4 குழந்தைகள் இருந்த நிலையில், 5-வதாக பிறந்த ஆண் குழந்தைக்கு முகமதுபாசில் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். அப்துல்சலாம் வேலைக்கு சரிவர செல்லாத நிலையில் குடும்பச் செலவுக்காகவும், மது குடிப்பதற்காகவும், சூதாட்டத்துக்காகவும் அவ்வப்போது நண்பர்களிடம் கடன் வாங்கி வந்தார்.
 இதில் தனது நண்பரான தென்னூரை சேர்ந்த ஆரோக்கியராஜிடம் (44) பல்வேறு தவணைகளில் பணம் வாங்கியதற்காக அப்துல்சலாம் ரூ.80 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடன் தொகையை கேட்டு அப்துல்சலாமுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்தார்.
ரூ.80 ஆயிரத்துக்கு விற்ற குழந்தை
ஒரு கட்டத்தில் கடன் தொகையை கேட்டபோது, அப்துல்சலாம் தனது குழந்தைகளை வளர்க்கவே சிரமப்படுவதாகவும், அதனால் கடன் தொகையை கொடுக்க முடியவில்லை என்றும் ஆரோக்கியராஜிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அவர் அப்துல்சலாமிடம், உனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், 5-வதாக ஒரு குழந்தை பெற்று அதனை வளர்க்க மிகவும் சிரமப்படுகிறாய். ஆகவே ரூ.80 ஆயிரம் கடன் தொகையை நீ கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக, உனக்கு 5-வதாக பிறந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்து விடும்படியும், அந்த குழந்தையை தனது உறவினரிடம் கொடுத்து நல்ல முறையில் வளர்க்க கூறுவதாகவும் கூறினார்.
இதுகுறித்து அப்துல்சலாம் தனது மனைவி கைருனிஷாவிடம் கூறி அவரை சம்மதிக்க வைத்தார். கடந்த 19-ந் தேதி குழந்தையை ஆரோக்கியராஜிடம் அப்துல்சலாம் ஒப்படைத்தார். அந்த குழந்தையை தனது சகலையின் தம்பியான திருச்சி தொட்டியத்தை சேர்ந்த சந்தனகுமாரிடம் (46) கொடுத்து வளர்க்க கூறினார். சந்தனகுமாருக்கு குழந்தை இல்லாததால் அவரும் அந்த குழந்தையை வளர்த்து வந்தார்.
3 பேர் கைது
இதற்கிடையே குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் இருந்த கைருனிஷா தனது கணவர் அப்துல்சலாமிடம் குழந்தையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதைக்கேட்ட அப்துல்சலாம் அவரைக் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைருனிஷா உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் விசாரணை நடத்தினார்.  இதையடுத்து கடனுக்காக பெற்ற குழந்தையை விற்ற அப்துல்சலாம் மற்றும் அவருடைய நண்பரான ஆரோக்கியராஜ், தொட்டியத்தை சேர்ந்த சந்தனகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
மேலும், சந்தனகுமாரிடமிருந்து குழந்தையை வாங்கி அதன் தாய் கைருனிஷாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் கைதான 3 பேரையும் திருச்சி 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது 3 பேரையும் வருகிற 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மணப்பாறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.  கடனுக்காக பெற்ற குழந்தையை தந்தை விற்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story