‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 Jan 2022 8:28 PM GMT (Updated: 27 Jan 2022 8:28 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத ெதரு விளக்குகள்

மதுரை சிக்கந்தர்சாவடியை அடுத்த பொதும்பு ஆவின்நகரில் உள்ள தெருவிளக்குகள் சரிவர இரவு நேரத்தில் எரிவதில்லை. ஒருசில மின்கம்பத்தில் தெரு விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து மின்கம்பத்தில் தெருவிளக்குகள் பொருத்தவும், தெருவிளக்குகள் அனைத்தும் ஒளிரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-கவிதா, ஆவின்நகர்.

அடிப்படை வசதி தேவை 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கொருக்காம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
-சரண்யா, வெம்பக்கோட்டை. 

துர்நாற்றம் 

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் துரைராஜ் சத்திர வடக்கு தெருவில் சிலர் மீன் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக செல்லும் போது மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-செந்தில்வேல், வெளிப்பட்டினம். 

புதர் மண்டி கிடக்கும் பூங்கா 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பூங்காவில் தற்போது புதர்மண்டி கிடக்கிறது. அங்குள்ள உடற்பயிற்சி கூடமும் செயல்படாமல் உள்ளது. பூங்கா புதர்மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறுவர், சிறுமிகள் பூங்காவுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, புதர் மண்டி கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும். 
-கோகுல் முனியசாமி, காரைக்குடி. 

குடிநீர் வினியோகம் 

ராமநாதபுரம் நகரில் காலை 7 மணிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இது வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் மிகுந்த வசதியாக இருந்தது. ஆனால் தற்போது மாலை 4 மணிக்கு குடிநீர் வினியோகம் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் காலை 7 மணிக்கே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-அன்வர்தீன், ராமநாதபுரம். 

Next Story