தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Jan 2022 7:47 PM GMT (Updated: 28 Jan 2022 7:47 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

நாய்கள் தொல்லை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் நாய்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை 38-வது வார்டு விசாலாட்சி நகரில் தார்சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். முதியவர்களும், பொதுமக்களும் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மழை காலத்தில் மழை தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், விசாலாட்சி நகர்.

Next Story