பெருந்துறை அருகே விபத்து; கணவன், மனைவி பரிதாப சாவு- 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது


பெருந்துறை அருகே விபத்து; கணவன், மனைவி பரிதாப சாவு- 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது
x
தினத்தந்தி 30 Jan 2022 9:15 PM GMT (Updated: 30 Jan 2022 9:15 PM GMT)

பெருந்துறை அருகே நடந்த விபத்தில் கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக 2 வயது குழந்தை உயிர் தப்பியது.

பெருந்துறை
பெருந்துறை அருகே நடந்த விபத்தில் கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக 2 வயது குழந்தை உயிர் தப்பியது.
கணவன்-மனைவி
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவரது மனைவி புனிதா (32).  இந்த தம்பதிக்கு ஹர்ஷினிகா (5) என்கிற ஒரு மகளும், கவுரீஸ் (2) என்கிற மகனும் உள்ளனர். 
குன்னத்தூரில் இயங்கி வரும் தனியார் பனியன் கம்பெனியில் சங்கர் பிரிண்டிங் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.  இந்த நிலையில் நேற்று காலை சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் வசித்து வரும் புனிதாவின் தங்கை சித்ரா வீட்டில் இருக்கும் தங்களது மகள் ஹர்ஷினிகாவை அழைத்து வருவதற்காக சங்கர் மனைவி மற்றும் குழந்தை கவுரிஸ்வுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
கார் மோதியது
 பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளியம் பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவையில் இருந்து திருப்பதியை நோக்கி வந்த கார் ஒன்று எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சங்கர் மற்றும் புனிதா இருவருக்கும் தலையில் படுகாயம் அடைந்தனர். இதில் புனிதாவின் மடியில் அமர்ந்து வந்த குழந்தை கவுரீஸ் எந்த காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். 
இருவர் சாவு
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கணவன், மனைவி மற்றும் உயிர் தப்பிய குழந்தை கவுரீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சங்கரும், புனிதாவும் பரிதாபமாக இறந்தனர்.  தாய் தந்தை இருவரையும் விபத்தில் பறிகொடுத்த குழந்தை கவுரீஸ் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். 
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் ஷியாம்சுந்தரை கைது செய்தனர்.  மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story