திருமணத்துக்கு வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


திருமணத்துக்கு வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2022 2:40 PM GMT (Updated: 2022-01-31T20:10:12+05:30)

ஆர்.கே.பேட்டை அருகே திருமணத்துக்கு உறவினர்கள் வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-2 மாணவி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் சினேகா (வயது 17). இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சினேகாவின் தந்தையும், தாயும் இறந்து விட்டதால் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது அத்தை முனியம்மாள் (43) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சினேகாவிற்கும் அவரது உறவுக்கார வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் வற்புறுத்தி வந்துள்ளனர். இந்த திருமணத்தில் சினேகாவிற்கும், அவரது அத்தை முனியம்மாளுக்கும் விருப்பமில்லை. ஆனாலும் உறவினர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முனியம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது வீட்டில் தனியாக இருந்த சினேகா மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பி வந்த முனியம்மாள் சினேகா பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சினேகாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story