200 குடும்பத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்


200 குடும்பத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2022 6:45 PM GMT (Updated: 2 Feb 2022 6:45 PM GMT)

பாளையங்கோட்டையில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி 200 குடும்பத்தினர் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
பாளையங்கோட்டையில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி 200 குடும்பத்தினர் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்புகள்

பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அம்பேத்கர் காலனியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
பழமையான இந்த குடியிருப்புகளில் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டும் பெயர்ந்தும் காணப்பட்டன. இதனால் இதனை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்தப்பகுதி குடியிருப்புகளை முழுமையாக இடித்துவிட்டு புதிதாக தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதில் 408 வீடுகள் கட்டப்படும் என கூறப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு அதே பகுதியில் புதிதாக வீடு கட்டித்தர வலியுறுத்தி நேற்று திடீரென அந்த பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கூறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தேர்தல் முடிந்ததும் உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்ததால், அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

Next Story