கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது


கைதான விடுதி பெண் வார்டனுக்கு தஞ்சை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது
x
தினத்தந்தி 7 Feb 2022 9:43 PM GMT (Updated: 7 Feb 2022 9:43 PM GMT)

பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான விடுதி பெண் வார்டனுக்கு ஜாமீனும், பள்ளி தாளாளருக்கு முன்ஜாமீனும் வழங்கி தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

தஞ்சாவூர்;
பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான விடுதி பெண் வார்டனுக்கு ஜாமீனும், பள்ளி தாளாளருக்கு முன்ஜாமீனும் வழங்கி தஞ்சை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
பள்ளி மாணவி தற்கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர், கடந்த மாதம் 9-ந் தேதி விஷம் குடித்து விட்டார். அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 19-ந் தேதி லாவண்யா உயிரிழந்தார்.
விடுதி வார்டன் கைது
மாணவி இறப்பதற்கு முன்பாக பள்ளி அருகே உள்ள விடுதியில் அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதால் மனஉளைச்சலில் விஷம் குடித்து விட்டதாக திருக்காட்டுப்பள்ளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். 
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி(62) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதமாற்ற புகார்
இந்த நிலையில் எனது மகளை மத மாற்றம் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியதால் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம் புகார் மனு அளித்தார்.
ஜாமீன்
மேலும் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டிலும் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தார். 
இந்த நிலையில் வார்டன் சகாயமேரிக்கு ஜாமீன் கேட்டும், பள்ளி தாளாளர் ராக்கேல் மேரிக்கு முன்ஜாமீன் கேட்டும் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வக்கீல் ஜெயச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி மதுசூதனன், விடுதி வார்டன் சகாயமேரிக்கு நிபந்தனையற்ற ஜாமீனும், பள்ளி தாளாளர் ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீனும் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story