சாலையோரம் நின்ற குப்பை லாரி மீது ஆம்புலன்ஸ் மோதலில் 4 பேர் காயம்
பிரசவத்துக்காக கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், சாலையோரம் நின்ற குப்பை லாரி மீது மோதியது. இதில் டிரைவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
பிரசவத்துக்காக...
சென்னை அரும்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாநகராட்சி குப்பை லாரி ஒன்று அந்த பகுதியில் குப்பைகளை அகற்றி விட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மாங்காட்டை சேர்ந்த அசிராபேகம் (வயது 27) என்ற கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு, அவரை பிரசவத்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்தது.
ஆம்புலன்சை மதுரை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் முருககுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மருத்துவ உதவியாளரான தஞ்சாவூரை சேர்ந்த மங்கலேஸ்வரி (24) என்ற பெண் உடன் இருந்தார்.
குப்பை லாரி மீது மோதல்
அரும்பாக்கம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலை ஓரம் நின்றிருந்த மாநகராட்சி குப்பை லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. குப்பை லாரியின் பின்பகுதியும் சேதம் அடைந்தது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் முருககுமார் மற்றும் மருத்துவ உதவியாளர் மங்கலேஸ்வரி இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு உதவியாக வந்த அவரது தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி அசிராபேகத்தை பிரசவத்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த 4 பேரையும் அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சேதமடைந்த ஆம்புலன்ஸ் வாகனம் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. குப்பை லாரியின் பின்பகுதி சேதம் அடைந்ததால் இதுபற்றி அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் குப்பை லாரி டிரைவர் மோகன்ராஜ் புகார் அளித்தார்.
Related Tags :
Next Story