டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயற்சி; ரியல் எஸ்டேட் தரகர் உள்பட 2 பேர் கைது


டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயற்சி; ரியல் எஸ்டேட் தரகர் உள்பட 2 பேர் கைது
x

டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் தரகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளநோட்டு

சென்னை கிண்டி மடுவாங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், விற்பனையாளர் சரவணனிடம் 200 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில்களை கேட்டார். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த சரவணன், அது கள்ளநோட்டு என்பதை கண்டுபிடித்தார்.

உடனே இதுபற்றி கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் புகழ்வேந்தன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த அஜாஸ் (வயது 21) என்பதும், ரியல் எஸ்டேட் தரகர் என்பதும் தெரிந்தது. அஜாஸ் மற்றும் அவருடன் வந்த ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமீருதீன் (26) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 92-ம், ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டு மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ள நோட்டு்களை சப்ளை செய்த மேடவாக்கத்தை சேர்ந்த ஷகீம் ஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story