பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பெற்றோரை இழந்து கல்வி கற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு உதவித்தொகை குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆதிதமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம்,
பெற்றோரை இழந்து கல்வி கற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு உதவித்தொகை குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆதிதமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மனு
ராமநாதபுரம் மாவட்ட ஆதி தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறையினரை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோரில் தாய் அல்லது தந்தையில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டாலோ அல்லது வருவாய் ஈட்ட முடியாமல் நிரந்தரமாக ஊனமடைந்தாலோ அவர்களின் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ரூ.75ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த தொகையை அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தி அதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் முதிர்வு தொகையை மேற்கண்ட பள்ளி மாணவ-மாணவிகள் எதிர்கால உயர் கல்வி செலவுக்காகவும், நலனுக்காகவும் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுஉள்ளது. ஆனால், இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத் தினாலும், தகுதியான மாணவர்களுக்கு சரிவர சென்றடையாத தாலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளில் இல்லாததாலும் இந்த திட்டம் உரியமுறையில் மாணவ-மாணவிகளை சென்றடையவில்லை.
இதனால் பெற்றோர் இல்லாத மாணவ-மாணவிகள் இந்த திட்டம் பற்றி அறியாமல் யாரிடம் உதவி கேட்பது யாரிடம் விண்ணப்பிப்பது யாரை அணுக வேண்டும் என்று தெரியாமலேயே இன்றளவும் உள்ளனர். அரசாணையின்படி தகுதி இருந்தும் இதுவரை பலர் பயனடைய முடியாமலேயே உள்ளனர்.
விழிப்புணர்வு
பள்ளிகளில் கேட்டால் வருவாய்த்துறையை அணுகுமாறும், வருவாய்த்துறையினர் கல்வித்துறையை அணுகுமாறும் தங்கள் பொறுப்புகளை தட்டிகழித்து வருகின்றனர். இதனால் அரசு திட்டம் செயல்படுத்தியும் உரிய முறையில் பயன் அடையமுடியாமல் போய்விடுகிறது. எனவே, இதுபோன்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பிக்க செய்து பயனடைய செய்ய வேண்டும். இதனால் பெற்றோரை இழந்தோ, உரிய வருவாய் இன்றியோ பொருளாதார சூழ்நிலையால் தொடர் கல்வி கற்க முடியாமல் இடை நிறுத்தம் ஏற்பட்டு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை தடுக்கப்படும்.
உறுதி
மேற்கண்ட அரசாணை குறித்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்திற்கும் முறையான அறிவிப்பு செய்து அதுசார்ந்த விவரப்பட்டியல் பலகை வைப்பதோடு தகுதியான மாணவ, மாணவிகள் அரசு நிதியைப் பயன்படுத்தி தொடர் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதாக முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story