தேனி அல்லிநகரம் நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைப்பு தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


தேனி அல்லிநகரம் நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைப்பு தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 31 March 2022 12:15 PM GMT (Updated: 31 March 2022 12:15 PM GMT)

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சியில் நியமனக்குழு, ஒப்பந்தக்குழு, வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நகராட்சியில் மொத்தம் 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர், அ.ம.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என 11 பேர் மட்டுமே தேர்தலில் பங்கேற்க வந்தனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேர், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 2 பேர், சமீபத்தில் காங்கிரசில் இணைந்த சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என 22 பேர் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்த போதிலும் அவர்கள் தேர்தலில் பங்கேற்காமல் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் கூறுகையில், தேர்தலை நடத்த 17 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறித்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மற்றொரு நாளில் தேர்தல் நடத்தப்படும் என்றார். 



Next Story