இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை


இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 April 2022 12:15 AM IST (Updated: 5 April 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டூர்:-

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். 
கோட்டூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

பட்டதாரி பெண்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நாலாம் சேத்தி அய்யம்பெருமாள் தெருவை சேர்ந்தவர் தனபால். சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி இந்திரா. 
இவர்களுக்கு தேவா(வயது 25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர். வீட்டுக்கு ஒரே மகளான தேவதர்ஷினி பி.ஏ. பட்டதாரி ஆவார். 

திருமணம் நிச்சயம்

தேவதர்ஷினிக்கும், நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. 
திருமணத்துக்கான ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களாக மணமக்கள் வீட்டார் தீவிரமாக செய்து வந்தனர். 

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று மாலை மணப்பெண் வீட்டில் பரிசம் போடுவதற்கான நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பணிகளில் மணப்பெண் தேவதர்ஷினியின் வீட்டார் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தேவதர்ஷினியின் தாய் இந்திரா அரிசி எடுப்பதற்காக வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார்.  
அப்போது தேவதர்ஷினி அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த இந்திரா கதறி அழுதபடி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தூக்கில் தொங்கிய தேவதர்ஷினியை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தேவதர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் தேவதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சோகம்

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story