சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட பற்றாக்குறை குறைந்துள்ளது: கமிஷனர்
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கடந்த ஆண்டைவிட பற்றாக்குறை குறைந்துள்ளது என கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
கடந்த ஆண்டைவிட குறைவு
பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மீதான விவாத கூட்டத்துக்குப் பின்னர் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.6 ஆயிரத்து 384 கோடியாகவும், மொத்த செலவீனம் ரூ. 6 ஆயிரத்து 747 கோடியாகவும் உள்ளது. அந்தவகையில் பற்றாக்குறை ரூ.363 கோடியாக கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.554 கோடி பற்றாக்குறையாக இருந்தது.
கடந்த ஆண்டுகளைவிட நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது. இதற்கு சொத்துவரி முழுமையாக வசூல் செய்யப்பட்டது முக்கிய காரணம். பொதுமக்கள் சொத்துவரியை வரும் 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அம்மா உணவகம்
சொத்துவரி முழுமையாக வசூல் செய்யும்போதும், செலவீனங்களை அறியவில்பூர்வமாக செய்யும்போதும் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். சொத்துவரியை பொறுத்தவரையில் இந்தியாவில் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களைவிட சென்னையில் தற்போது உயர்த்தப்பட்ட சொத்துவரி அளவு குறைவுதான். கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இந்த பட்ஜெட் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனை கேட்டுத்தான் தயாரிக்கப்பட்டது. கவுன்சிலர்கள், அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சென்னை மாநகராட்சியை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். தமிழகத்தில் அம்மா உணவகம் திட்டம் தொடரும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் எற்கனவே தெரிவித்துள்ளனர். சென்னையில் அம்மா உணவகம் திட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story