புளியங்குடியில் பங்குனி திருவிழா; பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு


புளியங்குடியில் பங்குனி திருவிழா; பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு
x
தினத்தந்தி 12 April 2022 9:23 PM GMT (Updated: 12 April 2022 9:23 PM GMT)

புளியங்குடி சிந்தாமணி அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் விநாயகர் பூஜை, கும்ப பூஜை, மூலமந்திரஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலும் தினமும் இரவு கட்டளைதார்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக 8-ம் திருநாள் நிகழ்ச்சியான நேற்று ராமர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் வீதி உலா வந்தனர். விரதமிருந்த பக்தர்கள் பால்குடத்திற்கு பின்னால் கொளுத்தும் வெயிலில் பெண்களும், குழந்தைகளும் வீதிகளில் கும்பிடு நமஸ்காரம் மற்றும் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து இரவு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி, அகத்தீஸ்வரருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமுதாய நாட்டாமை அங்கப்பன், செயலாளர் திருமலைவேலு, பொருளாளர் முருகன், சமுதாய கமிட்டி உறுப்பினர்கள் முருகன், ஈஸ்வரன், சுப்பிரமணியன், முப்புடாதிராஜா, ரத்தினவேல் மற்றும் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story