மீன்பிடி திருவிழாவில் உற்சாகமாக பங்கேற்ற கிராம மக்கள்
எஸ்.புதூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
மீன்பிடி திருவிழா
எஸ்.புதூர் தானம் வயலகம் கண்மாய் அறக்கட்டளை மற்றும் ஆக்ஸிஸ் வங்கி சார்பில் 2012-ம் ஆண்டு சுண்ணாம்பு கண்மாய் சீரமைப்பு பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கண்மாய் சீரமைப்பு பணிக்காக ஆயக்கட்டுதாரர்கள் சார்பில் குறிப்பிட்ட தொகை வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு பெய்த மழையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் வாங்கி கண்மாயில் விடப்பட்டது. இந்த நிலையில் நீர் வற்ற தொடங்கியதை தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
கிராம மக்கள் உற்சாகம்
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, உலகூரணிபட்டி, எஸ்.உத்தம்பட்டி, மாயாண்டிபட்டி, செந்தலயன்களம், கே.உத்தம்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கண்மாயை சுற்றிலும் ஊத்தா, கச்சா, வலை ஆகியவற்றுடன் காத்திருந்தனர்.
பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கொடியசைத்ததை தொடர்ந்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ள தொடங்கினர். ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்தனர். மேலும் பிடித்த மீன்களை உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக எஸ்.புதூர் கிராம பகுதிகளில் வீடுகளில் மீன் வாசம் கமகமத்தது.
இந்த மீன்பிடி திருவிழாவில் எஸ்.புதூர் வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி, வயலக தலைவர் கொப்பையன் உள்பட வயலக பணியாளர்கள், கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story