சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழா
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத கோவிலில் 12 நாட்கள் நடக்கும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் அலங்கார ஆராதனைகள் சாமி புறப்பாடு நடைபெறும். மாலையில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் மாடவீதிகளில் உலா வருவார்.
5-ம் நாள் காலை நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சியும், இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும் பெரிய திருவடி கருடசேவையும் நடைபெறும்.
தொடர்ந்து 7-ம் நாள் காலை 10 மணிக்கு பெரிய தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் அலங்கரித்து வைத்து ேதரோட்டம் நடக்கிறது. விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.
ஆலோசனை கூட்டம்
பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.
பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். வெட்டுவாணம் மற்றும் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் சோ. செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் தேர் திருவிழாவின் போது தேர் செல்லும் வீதிகளில் தேர் புறப்படுவதற்கு முன்னதாக அனைத்து வித மின் வயர்களை அகற்றி தேரோட்டம் முடிந்தபின் இணைப்பு வழங்க வேண்டும் தேர் திருவிழா தவிர இதர திருவிழாவின்போது மும்முனை மின்சாரம் தடையின்றி சீராக வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
பேரூராட்சி சார்பில் தேர் செல்லும் வீதிகளில் பாதைகள் சீராக அமைத்தல், இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், கோவிலை சுற்றிலும் சுமார் 20 இடங்களில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்து தருதல், உயர்மின் கோபுர விளக்குகளை பழுது நீக்கி சீரமைத்து தர வேண்டும்.
தற்காலிக கழிவறை மற்றும் குளியல் அறை அமைத்தல், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோவில் வரை உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அகற்ற வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைத்து தர வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கவேண்டும், தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு வாகனம் கோவில் முன்பு நிறுத்த வேண்டும்.
கனரக வாகனங்களுக்கு தடை
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தேரோட்டம் நடைபெறுவதால் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். தேரோட்டத்தின் போது தேரின் முன் பகுதி பின் பகுதிகளில் தேவையற்ற பொதுமக்கள் தேர் சக்கரத்தின் அருகே செல்லாமல் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வெட்டுவாணம் கோவில் முதன்மை கணக்காளர் பாபு, பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் சபைமணியம் ஹரி ஆகியோர் நன்றி கூறினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story