22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 3:05 PM GMT (Updated: 10 May 2022 3:05 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வை எழுதினர்.

திண்டுக்கல்: 


பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வு நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 215 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 812 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களில் 12 ஆயிரத்து 51 பேர் மாணவர்கள், 12 ஆயிரத்து 761 பேர் மாணவிகள் ஆவார்கள். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையத்தின் வளாகத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

22 ஆயிரத்து 657 பேர்...
தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள், அனைவரும் பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று பிரார்த்தனை செய்தனர். அதையடுத்து காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக அவர்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு சிறிது நேரத்தில் தேர்வு தொடங்கியது. 

இதற்கிடையே சிறிது நேரம் தாமதமாக சில மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். உரிய பரிசோதனைக்கு பின்னர் அவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வை எழுதினர். 
மாவட்டம் முழுவதும் நேற்று 10 ஆயிரத்து 904 மாணவர்கள், 11 ஆயிரத்து 753 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 657 பேர் தேர்வு எழுதினர். 1,147 மாணவர்கள், 1,008 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 155 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Next Story