இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி கார் விற்பனை செய்வதாக தொழிலாளியிடம் பணம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாக கூறி கார் விற்பனை செய்வதாக தொழிலாளியிடம் பணம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் தாலுகா மேல்பேரடிக்குப்பத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 31) தொழிலாளி. இவருடைய அண்ணனின் முகநூலில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கார் விற்பனை என்று விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தை நந்தகோபாலின் வாட்ஸ்-அப்புக்கு அவரது அண்ணன் அனுப்பி வைத்தார்.
பின்னர் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை நந்தகோபால் தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாகவும், தனது மாருதி கார் 2015 வகை என்றும், அந்த காரை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு தருவதாகவும், காரை ராணுவ பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
பணம் மோசடி
மேலும் அதற்கான கூரியர் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்தும்படி அந்த நபர் கூறினார். இதை நம்பிய நந்தகோபால் கடந்த 10-ந் தேதியன்று ரூ.82 ஆயிரத்தை கூகுள்பே மூலம் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு 3 தவணையாக அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்ற அந்த நபர், நந்தகோபாலுக்கு கார் அனுப்பி வைக்காமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து நந்தகோபால், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story