அரசு தோட்டக்கலை பண்ணையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
நுண்ணீர் பாசனம், தேனீ வளர்ப்பு குறித்து அரசு தோட்டக்கலை பண்ணையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வெளிப்பாளையம்:-
நுண்ணீர் பாசனம், தேனீ வளர்ப்பு குறித்து அரசு தோட்டக்கலை பண்ணையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தோட்டக்கலை பண்ணை
நாகை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சான்றிதழுடன் கூடிய தோட்டக்கலை திறன் மேம்பாட்டு பயிற்சி 40 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதில் பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரித்தல், தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பயிற்சிகள் 30 நாட்களுக்கு அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
ஏற்கனவே தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் ஏதாவது ஒரு பயிற்சி பெற்றவர்களுக்கு இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தோட்டக்கலைத்துறையின் இணைய தளமான www.tnhorticulture.tn.gov.in-ல் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அளிக்கலாம்.
விண்ணப்பத்துடன் வங்கி கணக்கு புத்தகம், கல்வி தகுதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றின் நகல்களை இணைத்து, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
போக்குவரத்து செலவு
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை துறை வட்டார அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story