காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? - ப.சிதம்பரத்துக்கு, பிரதமர் மோடி பதிலடி


காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை?  - ப.சிதம்பரத்துக்கு, பிரதமர் மோடி பதிலடி
x
தினத்தந்தி 31 March 2019 11:30 PM GMT (Updated: 31 March 2019 10:16 PM GMT)

காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? என ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய பாதுகாப்பு துறையில் மற்றுமொரு மைல்கல் சாதனையாக, சமீபத்தில் செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழித்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனால் இதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், அறிவில்லாத அரசுதான் இத்தகைய பாதுகாப்பு ரகசியங்களை வெளியிடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இதற்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் ‘பாரத்வர்ஷ்’ புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்து பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தேச பாதுகாப்பு, பாலகோட் விமானப்படை தாக்குதல் போன்ற விவகாரத்தில் ஆதாரம் கேட்டு தவறான பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. எதற்கு ஆதாரம் கேட்கிறார்கள்? ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்? பாலகோட் விமானப்படை தாக்குதலை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், அங்கு பயங்கரவாத முகாம் இருந்ததையும் ஏற்றுக்கொள்ளும்.

பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் இல்லை என்று மக்களுக்கு காட்டுவதற்காக, அங்கு மறுகட்டமைப்பு பணிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. பாலகோட் தாக்குதலை நடத்தியது நமது வீரர்கள்தான், நான் அல்ல. அவர்களை நான் வணங்குகிறேன்.

செயற்கைகோள் எதிர்ப்பு சக்தியை இந்திய பாதுகாப்புத்துறை ஏற்கனவே பெற்றிருந்தும், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதிப்பதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் ஈடுபாடு இல்லை. ஆனால் எங்கள் அரசுக்கு அத்தகைய அழுத்தங்களை தாங்கும் சக்தி இருக்கிறது. எனவே நாட்டு நலன் கருதி உடனடி முடிவுகள் எடுக்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் (ப.சிதம்பரம்), தான் ஒரு மிகுந்த அறிவாளி என கருதுகிறார். செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். அப்படியானால் 1974-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை?

வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக முந்தைய காங்கிரஸ் அரசு பலமில்லாத ஒருசில ஒப்பந்தங்களை போட்டு இருந்தது. அத்துடன் அது குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழுவையும் அமைக்கவில்லை.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தோம். மேலும் மொரீசியஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் கருப்பு பண மீட்புக்காக வலுவான ஒப்பந்தங்களையும் போட்டுள்ளோம். இதன்மூலம் அங்கு பதுக்கப்படும் கருப்பு பணம் குறித்து உடனுக்குடன் தகவல் கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story