குடும்ப அரசியல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு


குடும்ப அரசியல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 12:00 AM GMT (Updated: 14 April 2019 12:43 AM GMT)

குடும்ப அரசியல், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தேனி,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் மக்களே, என்னுடைய அன்பான வணக்கம். நாளை (இன்று) தொடங்கும் தமிழ் புத்தாண்டுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை (இன்று) அம்பேத்கர் பிறந்த நாள். அம்பேத்கருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த மைதானத்தில் வெப்பமும் அதிகமாக இருக்கிறது. உங்களின் உற்சாகமும் அதிகமாக இருக்கிறது. நான் ஹெலிகாப்டரில் பறந்து வரும் போது, இந்த மைதானத்திலும், சாலையிலும் ஏராளமானவர்கள் திரண்டு இருப்பதை பார்த்தேன்.

உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தமிழகம் ஒட்டுமொத்த குரலில், நாளையும் நமதே, நாற்பதும் நமதே என்று சொல்வது தெரிகிறது. இன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 100-வது ஆண்டு தினம். நாம் அந்த படுகொலையில் உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக் கும், ஜெயலலிதாவுக்கும் நான் எனது அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன். இந்த புகழ்பெற்ற இருபெரும் தலைவர்களால் நமது தேசமே பெருமைப் படுகிறது. அவர்கள் ஏழைகளின் நலன்களுக்காக வாழ்ந்தார்கள். அவர்கள் கொடுத்துச் சென்ற நலத்திட்டங்களால் ஏழை மக்கள் வறுமையில் இருந்து வெளிவந்தார்கள்.

தமிழகத்தில் எதிரிகளாக தங்களை வரிந்து கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் தற்போது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். நான் 1979-ம் ஆண்டின் நிகழ்வை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கால கட்டத்தில் எப்படி தி.மு.க.வை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது என்பது உங்களுக்கு தெரியும். அதேபோல், 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சிறையில் இருந்தனர். அப்போது தி.மு.க. தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தனர் என்பது உங்களுக்கு தெரியும்.

இதுபோன்ற கசப்புணர்ச்சிகளை எல்லாம் தாண்டி, கடந்த காலங்களின் நிலைமைகளை எல்லாம் தாண்டி இன்றைக்கு காங்கிரசும், தி.மு.க.வும் ஒன்றாக சேர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் நம்மை எல்லாம் தவறாக திசை திருப்ப பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஊழலுக்கு ஆதரவாக ஒன்று திரண்டு இருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல, மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் முன்மொழிந்தார். ஆனால், நாட்டில் யாரும் அதை கேட்டு மகிழ்ச்சி அடையவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த கூட்டணியில் உள்ள அத்தனை பேரும் தாங்கள் பிரதமராக வேண்டும் என்று வரிசையில் காத்திருக்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில், நிதியமைச்சராக தந்தை (ப.சிதம்பரம்) இருந்தபோது, அவருடைய மகன் நாட்டில் கொள்ளையடித்தார். எப்போது எல்லாம் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்களோ, அப்போது எல்லாம் இந்த தேசத்தை கொள்ளையடிக்கின்றனர்.

தி.மு.க.வை பொறுத்தவரை அவர்கள் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான காரியங்களை செய்து, பொதுமக்களை திரட்டுகின்றனர். ஆனால், உங்கள் காவலாளியான நான் மிகவும் உஷாராக இருக்கிறேன். அவர்கள் என்ன செய்தாலும், இந்த மக்களை என்னிடம் இருந்து அவர்கள் ஏமாற்றிவிட முடியாது. அவர்கள் என்ன திருட்டுத்தனம் செய்ய முயற்சித்தாலும் அவர்கள் எல்லாம் இந்த காவலாளியால் பிடிக்கப்படுவார்கள்.

நாம் தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். காங்கிரசும், தி.மு.க.வும் தமிழகத்தில் செய்து வரும் இந்த விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுபோல், இலங்கையில் இருக்கும் தமிழ் சகோதரர்களின் வளத்துக்கு நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதுபோல் இங்கு இருக்கக்கூடிய வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல் இவற்றுக்கு எல்லாம் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

காங்கிரசும், தி.மு.க.வும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவை. துல்லியத் தாக்குதல் நடத்திய நம்மையும், ராணுவத்தின் வீரத்தையும் இவர்கள் கேள்வி கேட்கிறார்களே!. எப்படி இவர்களை நாம் கையாள்வது?. நமது ராணுவத்தின் வலிமையை பலப்படுத்த முயற்சிக்கும் நாம் இவர்களை எப்படி கையாளப்போகிறோம். அதேபோல், பயங்கரவாதத்துக்கு உதவி செய்யும் இவர்களை எப்படி நாம் கையாளப்போகிறோம்?.

நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது நாம் எந்த சமரசமும் செய்ய தயாராக இல்லை. நாம் இந்த தேசத்தின் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம். எதையும் செய்யாமல் விடமாட்டோம் என்கிற உறுதி மொழியை உங்களுக்கு தருகிறேன். தமிழகத்தின் துணிச்சல் மிக்க ஒரு விமானி, பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட போது இந்த அரசு ஒரு வரலாற்று சாதனையாக அவரை விடுவித்தது. ஆனால், அதையும் கூட காங்கிரஸ் அரசியலாக்கி இந்த தேசத்தின் பாதுகாப்பையும், ராணுவத்தையும் அவமானப்படுத்தி பேசி வருகிறது.

விவசாயிகள் நமது தேசத்தின் ஆன்மா போன்றவர்கள். பிரதம மந்திரியின் திட்டத்தில் தமிழக விவசாயிகள் ரூ.4 ஆயிரம் கோடி வரை பயன் பெற்று உள்ளனர். அவர்களது முதல் தவணை பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. 2-வது தவணை பணம் வருவதற்கான காலமும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராமநாதபுரம் டி-பிளாக் அம்மா பூங்கா அருகே உள்ள மைதானத்தில் பா.ஜனதா சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா, மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நெல்லை தொகுதி வேட்பாளர் மனோஜ்பாண்டியன், இடைத்தேர்தல் நடைபெறும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோரை ஆதரித்து இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர். காசியும், ராமேசுவரமும் ஆன்மிக நம்பிக்கையால் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராமநாதபுரத்திற்கு வந்தவுடனே, அப்துல் கலாமின் நினைவு எனக்கு ஏற்படுகிறது. அவர் வளமான இந்தியா உருவாக வேண்டும் என்று கனவு கண்டவர். அவரது கனவை நிறைவேற்றி, வளர்ச்சியில் இந்தியாவை ஒரு புதிய உச்சத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையின் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். மே மாதம் 23-ந் தேதி மீண்டும் மோடியின் ஆட்சி அமைந்தால் ஜலசக்திக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். அந்த அமைச்சகத்தின் மூலம் மக்களின் தண்ணீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

கடின உழைப்பாளிகளான மீனவர்கள், தங்களது வருமானத்திற்கு கடலை நம்பி தான் உள்ளனர். உங்களது காவலாளியான நான், உங்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் எப்போதும் முன்னுரிமை தருவேன். மீண்டும் எங்களது ஆட்சி அமைந்தவுடன், உடனடியாக மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

எங்களுடைய தத்துவம், முதலில் நாடு தான். ஆனால் எதிர்கட்சிகளை பொறுத்தவரை அவர்களுக்கு முதலில் குடும்பம் தான். இதற்கு உதாரணம் சொல்கிறேன். டெல்லியில் உள்ள நினைவகங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தை சார்ந்தது. வேறு யாருக்கும் அங்கு நினைவகம் கிடையாது. ஏன் நாட்டிற்கு வேறு யாரும் சேவை செய்யவில்லையா? அப்துல்கலாமுக்கு ராமேசுவரத்தில் மிகப்பெரிய நினைவகம் அமைத்தோம். இதன் மூலம் கலாம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன என்பதனை மற்ற பகுதியில் இருந்து இங்கு வருகிறவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நினைவகங்களை உருவாக்கினார்கள். ஏன் காங்கிரஸ் பின்னணி கொண்ட ஜனாதிபதிகளாக இருந்த தமிழகத்தின் எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், கேரளாவில் கே.ஆர்.நாராயணன் ஆகியோருக்கு கூட நினைவு சின்னம் அமைக்கவில்லை.

அவர்கள் தேர்தல் காரணங்களுக்காக வடக்கையும், தெற்கையும் பிரிப்பார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை இந்தியா ஒன்று தான். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது பலம். இதனை நினைத்து நாடு பெருமைப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். பின்னர் ஹெலிகாப்டரில் மதுரை சென்று அங்கிருந்து தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story