டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு


டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
x

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மதுபான ஊழல்

டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கி, சலுகைகளை அளித்தது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன்

இந்த ஊழலில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா பெயரும் அடிபட்டு வருகிறது. அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று கெஜ்ரிவால் சாடினார்.

மணிஷ் சிசோடியாவுக்கு சம்மன் இந்த ஊழலில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் நாயக், அபிசேக் போயின்பள்ளி உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

கால அவகாசம் வேண்டும்

இந்த நிலையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கேட்டிருந்தார். இதையடுத்து மணிஷ் சிசோடியா சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியது.

144 தடை உத்தரவு

இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிபிஐ விசாரணைக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி தலைவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிஷ் சோடியா காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story