2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர், கிளீனர் சாவு


2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர், கிளீனர் சாவு
x

சிக்பள்ளாப்பூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டிரைவர், கிளீனர் உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்:-

லாரிகள் மோதல்

ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவிற்கு சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. சிக்பள்ளாப்பூர் புறநகர் தேசிய நெடுஞ்சாலை 44-ல் லாரி வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. இதை பார்த்து டிரைவர் லாரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை அடுத்த சஞ்சேபள்ளி பகுதியில் உள்ள சாலையோரத்தில் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த லாரி மீது கட்டுபாட்டை இழந்த சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் விபத்தால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

டிரைவர், கிளீனர் சாவு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார், காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்தனர். இந்தநிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் உயிரிழந்தவர்கள் லாரி டிரைவர் வெங்கடேஷ் (வயது 45), கிளீனர் சஞ்சீவ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரி சென்ற போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story