பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது


பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2017 10:15 PM GMT (Updated: 5 Jan 2017 9:54 PM GMT)

பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் புத்தாண்டு தினத்தில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

பெங்களூருவில் கடந்த 31-ந் தேதி நள்ளிரவு எம்.ஜி.ரோடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது சில பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்கள். பெங்களூருவை சேர்ந்த அனிதா(வயது 23. பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) தனது தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு 1-ந் தேதி அதிகாலையில் ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நடுரோட்டில் அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்ல முயன்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

4 பேர் கைது

இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த வீடியோ காட்சியை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கற்பழிக்க கடத்த முயன்றதாக 4 பேரை பானசவாடி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராட்டு

31-ந் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களுக்கு ஏதாவது தொல்லை ஏற்பட்டு இருந்தால், அதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அதுதொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.

1-ந்தேதி அதிகாலையில் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வீடியோ காட்சிகள் ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகளை போலீசாரிடம் கொடுத்த பிரசாந்த் பிரான்சிஸ் பாராட்டுக்கு உரியவர்.

கல்லூரி மாணவர்

வீடியோ பதிவை அவர் கொடுத்த அரை மணி நேரத்தில் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்ட 48 மணிநேரத்தில் அய்யப்பா, லெனின் என்ற லினோ, சோமசேகர் என்ற சோனு, சுதேஷ் என்ற 4 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு 20 முதல் 25 வயது இருக்கும். இவர்களில் லினோ பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவர்களில் அய்யப்பா தான் முக்கிய குற்றவாளி. அவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்கள் 4 பேருமே பகுதி நேரமாக ஓட்டல்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

2 பேர் தலைமறைவு

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். கைதானவர் களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார். 

Next Story