உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி 70 தொகுதிகளில் 57-ஐ கைப்பற்றியது


உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி 70 தொகுதிகளில் 57-ஐ கைப்பற்றியது
x
தினத்தந்தி 11 March 2017 11:45 PM GMT (Updated: 2017-03-12T02:50:45+05:30)

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57-ஐ கைப்பற்றி சாதனை படைத்தது

ஹரித்துவார்,

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57-ஐ கைப்பற்றி சாதனை படைத்தது.

பா.ஜனதா அபார வெற்றி

70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே பா.ஜனதா 55-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் பா.ஜனதா அபார வெற்றி கண்டது. மோடியின் சுனாமி அலை என்று கூறப்படும் அளவிற்கு இந்த வெற்றி இருந்தது. 70 தொகுதிகளில் 36-ஐ வென்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானபோது பா.ஜனதா 57 தொகுதிகளில் வெற்றியை சுவைத்தது.

காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே பிடித்தது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

முதல்-மந்திரி தோல்வி

காங்கிரஸ் சார்பில் ஹரித்துவார் ரூரல் மற்றும் கிச்ஹா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் அந்த 2 தொகுதிகளிலுமே தோல்வி கண்டார். ஹரித்துவார் ரூரல் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் யதிஷ்வர ஆனந்த்திடம் அவர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

உத்தரகாண்டில் பா.ஜனதா 46.5, காங்கிரஸ் 33.5, பகுஜன் சமாஜ் 7 சதவீத ஓட்டுகளை பெற்றன. சுயேச்சைகளுக்கு 10 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

தேர்தல் தோல்வியை அடுத்து, முதல்-மந்திரி பதவியை ஹரிஷ் ராவத் உடனடியாக ராஜினாமா செய்தார். எனினும் அடுத்த ஆட்சி அமையும் வரை அவரை பதவியில் தொடருமாறு கவர்னர் கிருஷ்ணகாந்த் கேட்டுக்கொண்டார். 

Next Story