சொத்துக்குவிப்பு வழக்கு: இமாச்சல பிரதேச முதல் மந்திரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


சொத்துக்குவிப்பு வழக்கு: இமாச்சல பிரதேச முதல் மந்திரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 31 March 2017 12:25 PM GMT (Updated: 31 March 2017 12:25 PM GMT)

சொத்துக்குவிப்பு வழக்கில் இமாச்சல பிரதேச முதல் மந்திரி வீரபத்ர சிங் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சிம்லா,

இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரபத்ரசிங் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீதும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து வீரபத்ரசிங்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே ,தங்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ரத்து செய்ய  சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வீரபத்ர சிங்கும் அவரது மனைவியும் மனு தாக்கல் செய்து இருந்தனர். 

இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு  தள்ளுபடி செய்திருந்த நிலையில், வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவி பிரதீபா சிங் மீது சிபிஐ இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் இருவர் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தற்போது நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ள  எல்.ஐ.சி ஏஜெண்டின் ஆனந்த் சவுகான் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. 

வீரபத்ரசிங்கை கைது செய்யவும் விசாரணை நடத்தவும் விதிக்கப்பட்டு இருந்த தடையையும் நீக்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கில் அவருக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Next Story