பா.ஜனதா தலைவர் தருண் விஜய் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்


பா.ஜனதா தலைவர் தருண் விஜய் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 April 2017 8:13 AM GMT (Updated: 2017-04-10T13:43:20+05:30)

தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த தருண் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

வெளிநாட்டு செய்தி சேனலில் டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பேசிய பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண் விஜய் ‘‘நாங்கள் நிறவெறியர்கள் என்றால் ஏன், தென்னிந்தியர்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் கருப்பர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்?... எங்களை சுற்றி கருப்பர் இன மக்களும் இருக்கிறார்கள். இந்தியாவை நிறவெறி கொண்டவர்கள் என்று கூற முடியாது” என்றது பெரும் சர்ச்சையை எழுப்பியது. தருண் விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தருண் விஜய் தன்னுடைய கருத்து தொடர்பாக தெளிவாக விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் பா.ஜனதா தலைவர் தருண் விஜய் தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி நோட்டீஸ் வழங்கியது. இன்று பாராளுமன்றம் தொடங்கியதும் இப்பிரச்சனையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சியினர் அமளியை அடுத்து 10 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கியதும் இதே பிரச்சனை காரணமாக ஒத்திவைக்க நேரிட்டது. தருண் விஜய் தன்னுடைய கருத்து தொடர்பாக விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, தென் இந்தியாவில் வாழும் மக்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா? இல்லையா? இது உங்களுடைய எண்ணத்தை காட்டுகிறது. நீங்கள் இந்தியாவை பிரிக்க விரும்புகிறீர்களா? தருண் விஜய்க்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? பாராளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமின்றி இவ்விவகாரம் தொடர்பாக வெளியேவும் போராட்டம் நடத்துவோம் என்றார். பாரதீய ஜனதா விளக்கம் அளிக்கவேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியா மதசார்பற்ற நாடு, ஜாதி, மதம் மற்றும் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்றுக் கொள்ளமுடியாது. தருண் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்றார். 

இதற்கிடையே பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோன் மணி அகாலிதளம் கட்சியின் உறுப்பினர் பிரேம் சிங், மன்னிப்பில் அர்த்தம் கிடையாது என கார்கேஜி கூறுகிறார். 1984 கலவரத்திற்கு காங்கிரஸ் மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று அவரிடம் தெரிவித்து கொள்ளவிரும்புகின்றேன் என்றார். மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில் தருண் விஜய்க்கு எதிராக தேசதுரோக குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து ஏற்பட்ட அமளி காரணமாக பாராளுமன்றம் மூன்றாவது முறையாக பிற்பகல் 1:50 வரையில் ஒத்திவைக்கப்பட்டது. 

வெங்கையா நாயுடு இது தொடர்பாக பேசுகையில் தருண் விஜய் விவகாரம் தொடர்பாக அரசியல் நடத்த வேண்டாம், அவர் அவருடைய கருத்தை ஏற்கனவே தெளிவு செய்துவிட்டார் என்றார். 

Next Story