மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணுக்கு சிகிச்சை முடிந்தது


மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணுக்கு சிகிச்சை முடிந்தது
x
தினத்தந்தி 4 May 2017 9:45 PM GMT (Updated: 4 May 2017 8:00 PM GMT)

உலகிலேயே அதிக எடையை கொண்டவர் என கருதப்பட்ட பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை முடிந்தது. அவர் மேல்சிகிச்சைக்காக அபுதாபி அழைத்து செல்லப்பட்டார்.

மும்பை,

உலகிலேயே அதிக எடையை கொண்டவர் என கருதப்பட்ட பெண்ணுக்கு மும்பையில் சிகிச்சை முடிந்தது. அவர் மேல்சிகிச்சைக்காக அபுதாபி அழைத்து செல்லப்பட்டார்.

அதிக எடை கொண்ட பெண்

எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா நகரத்தை சேர்ந்தவர் எமான் அகமது (வயது 37). இந்தப் பெண், தன்னுடைய 11 வயதிலேயே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலேயே 25 ஆண்டுகளை கழித்தார். இதனால், அவருடைய உடல் எடை 500 கிலோவைத் தொட்டது. இவர், உலகிலேயே அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்பட்டார்.

இந்த நிலையில், அவரது உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை அளிக்க மும்பை தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் முப்பாஷால், தாமாக முன்வந்து ஏற்பாடு செய்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் அவர் எகிப்தில் இருந்து விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை முடிந்தது

சிகிச்சையின் பலனாக, எமான் அகமதுவின் உடல் எடை 170 கிலோ ஆக குறைந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து நேற்று மதியம் 12.30 மணிக்கு ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இருப்பினும் அவரால் இன்னமும் எழுந்து நடக்க முடியவில்லை.

அவருக்கு அபுதாபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் நேற்று மாலை 6 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

ஏற்கனவே, எமான் அகமதுவுக்கு மும்பை ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அவரது உடல் எடை குறைப்பு பற்றிய தவறான தகவலை ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிடுகிறது என்றும் அவரது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

ஆனால், அவரது குற்றச்சாட்டை ஆஸ்பத்திரி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story