‘ஜிசாட்–9’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது


‘ஜிசாட்–9’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 5 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-06T01:58:19+05:30)

‘ஜிசாட்–9’ செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி.–எப்.9 ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.

ஸ்ரீஹரிகோட்டா,

‘ஜிசாட்–9’ செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி.–எப்.9 ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.

‘ஜிசாட்–9’ செயற்கைகோள்

தெற்கு ஆசியா நாடுகள் (சார்க்) தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘ஜிசாட்–9’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி–எப்.9 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டது.

இந்த ராக்கெட் இந்தியாவின் 11–வது ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட் ஆகும். இதில் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

சீறிப்பாய்ந்தது

28 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு நேற்று மாலை 4.57 மணிக்கு ‘ஜிசாட்–9’ செயற்கைகோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி–எப்.9 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2–வது ஏவுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.

3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2–ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தன. 49.1 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 415.2 டன் எடை கொண்டது. இதில் 2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் பொருத்தப்பட்டு இருந்தது.

வெற்றிகரமாக நிலைநிறுத்தியது

புறப்பட்ட 20 நிமிடத்தில் திட்டமிட்ட உயரத்தை அடைந்ததும், ‘ஜிசாட்–9’ செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி–எப்.9 ராக்கெட் வெற்றிகரமாக திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் கொண்டு சேர்த்தது. முதல் 2 நிலைகள் எரிந்து முடிந்ததும், 3, 4–வது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் இதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், விஞ்ஞானிகள் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

தகவல் தொடர்பு

‘ஜிசாட்–9’ செயற்கைகோள் தகவல் தொடர்புக்கு உதவும் ‘12 கே.யு.பேண்ட்’ எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தகவல் தொடர்பு மற்றும் பேரழிவை தெற்கு ஆசியா நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல்களை தெரிவிப்பது, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தகவல் திறன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொலை மருத்துவம், மாநில நூலகங்களை இணைக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளிக்கிறது.

தெற்கு ஆசியா நாடுகள் தங்களுடைய சொந்த பயன்பாட்டுக்காக 36 முதல் 54 மெகாஹெட்ஸ் திறன் கொண்ட ஒரு டிரான்ஸ்பாண்டரை பயன்படுத்த முடியும். இந்த செயற்கைகோளில் 1,700 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 நவீன ரக கேமராக்கள், மீட்பு மற்றும் தேடும் பணிக்கான டிராண்ஸ்பாண்டர்கள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதனுடைய ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.

சார்க் நாடுகளுக்கு பயன்

ரூ.235 கோடி மதிப்பில் ‘ஜிசாட்–9’ உருவாக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளால் பாகிஸ்தான் தவிர சார்க் நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகள் பயன்அடையும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் குறித்து செய்தி சேகரிப்பதற்கும், படங்கள் எடுப்பதற்காக சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிகளில் இருந்து பத்திரிகையாளர்கள் வழக்கமாக அழைத்து செல்லப்படுவது வழக்கம். ஆனால் நேற்று பத்திரிகையாளர்களை இஸ்ரோ நிறுவனம் அழைத்து செல்லவில்லை. மேலும் ராக்கெட் ஏவப்படும் நேரமும் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தெற்கு ஆசியா செயற்கைகோள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2014–ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி. சி–23 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, ‘இந்திய விஞ்ஞானிகள் சார்க் நாடுகளுக்கு என தனியாக செயற்கைகோள்களை உருவாக்க வேண்டும். அதை அந்த நாடுகளுக்கு இந்தியா பரிசாக அளிக்கலாம். நமது செயற்கைகோள் அனைத்து சார்க் நாடுகளுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும்’ என்றார்.

அதன்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜிசாட்–9 செயற்கைகோளை தயாரித்து விண்ணில் செலுத்தி உள்ளனர். அதற்கு ‘தெற்கு ஆசியா செயற்கைகோள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

5 வெற்றி

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு 16 ஆண்டுகளாக சோதனை முறையில் இயக்கப்பட்டு வந்த கிரையோஜெனிக் என்ஜின் 2–வது முறையாக ஜி.எஸ்.எல்.வி.–எப்.9 ராக்கெட்டில் பொருத்தப்பட்டதன் மூலம், முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

11 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டதில் 5 ராக்கெட்டுகள் வெற்றியும், 5 ராக்கெட்டுகள் தோல்வியையும், ஒரு ராக்கெட் பகுதி வெற்றியையும் சந்தித்து உள்ளன. இதில் 6 என்ஜின்கள் ரஷியா நாட்டையும், 5 என்ஜின்கள் இந்தியாவையும் சேர்ந்தவை ஆகும்.


Next Story