டி.டி.வி.தினகரன் மீதான வழக்கை விசாரிக்கும் டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதிக்கு மிரட்டல்


டி.டி.வி.தினகரன் மீதான வழக்கை விசாரிக்கும் டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதிக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 9 May 2017 12:00 AM GMT (Updated: 8 May 2017 10:01 PM GMT)

டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரித்து வரும் டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலமாக ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டி அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி ஊழல் தடுப்பு தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி, தனக்கு மிரட்டல் வந்ததாக டெல்லி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன்

அதில், கடந்த மாதம் 28–ந் தேதியன்று, அதாவது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரணை தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு யாரோ அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தன்னை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்று கூறிய அந்த நபர் சுகேஷ் சந்திரசேகருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

இது குறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:–

தொலைபேசி அழைப்பு

கடந்த ஏப்ரல் 28–ந் தேதியன்று பிற்பகல் 1 மணி அளவில் தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி தன்னுடைய அறையில் இருந்தபோது அவருடைய தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய நபர் தன்னுடைய பெயர் ஹனுமந்த் பிரசாத் என்றும், தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரின் தனிச்செயலாளர் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு, நீதிபதியிடம் பேச விரும்புவதாக தெரிவித்தார்.

சில வினாடிகளுக்கு பிறகு வேறு ஒருவர் தொடர்பில் வந்து, தான் நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்’ சார்பாக பேசுவதாகவும், சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை என்றால் பணி நிமித்தமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார். அந்த நபர் ஒரு செல்போன் எண்ணை நீதிபதியிடம் தந்து அந்த எண்ணில் பிறகு அழைக்குமாறும் கூறி இருக்கிறார்.

வழக்கு பதிவு

நீதிபதி பூனம் சவுத்ரியின் செல்போனிலும், அந்த குறிப்பிட்ட எண்ணில் இருந்து நிறைய தடவை முயற்சித்ததாக ‘மிஸ்டு கால்’ பட்டியலில் அந்த எண் பதிவாகி இருக்கிறது. அப்படி எல்லாம் ஜாமீன் தர முடியாது என்று மறுத்த நீதிபதி உடனடியாக டெல்லி போலீசை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஆள் மாறாட்டம், அரசு ஊழியரை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story