70 நாட்களில் உயிரிழந்த ஆற்றுக்கு புத்துயிர் கொடுத்த 700 கிராமங்கள்!


70 நாட்களில் உயிரிழந்த ஆற்றுக்கு புத்துயிர் கொடுத்த 700 கிராமங்கள்!
x
தினத்தந்தி 9 May 2017 1:17 PM GMT (Updated: 9 May 2017 1:39 PM GMT)

700 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து குப்பையாக காட்சியளித்த ஆற்றுக்கு 70 நாட்களில் உயிர் கொடுத்து உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஓடும் குட்டேம்பெரூர் ஆற்றுக்கு 700 கிராம மக்கள் ஒன்றாக இணைந்து உயிர் கொடுத்து உள்ளனர். குட்டேம்பெரூர் ஆறானது கடந்த 20 ஆண்டுகளாக மணல் கொள்ளை, கழிவு நீர்கலப்பு, கட்டிட கழிவுகள் போன்றவற்றால் தன்னுடைய அழகான இயல்பை இழந்து காட்சியளித்தது. ஆற்றில் இருந்த மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழிந்தது. 20 ஆண்டுக்களுக்கு முன்னர் சுத்தமாக பாய்ந்த ஆற்றை பற்றி உள்ளூர் பெரியவர்கள் பேசியது, மீண்டும் அதற்கு உயிர்கொடுக்க வேண்டும் என கிராம மக்களை யோசிக்க செய்து உள்ளது.

வறட்சியை அடுத்து இனியும் ஆற்றை அழியவிட கூடாது என உள்ளூர் மக்கள் திட்டமிட்டு பணியாற்றி ஆற்றை மீட்டெடுத்து உள்ளனர்.

சுமார் 700 கிராமங்களை சேர்ந்த மக்கள் (பெரும்பாலும் பெண்கள்) ஒன்றாக இணைந்து ஆற்றில் இருந்த கழிவுகளை அகற்றி உள்ளனர்.

கொடிய நோய்களை பரப்பக்கூடிய கழிவுகள் மற்றும் பாசிகள் நிறைந்து காணப்பட்ட குட்டேம்பெரூர் ஆற்றை அவர்கள் சுத்தம் செய்து உள்ளனர். 700 கிராம மக்கள் இணைந்து செய்த பணிக்கு சுமார் 70 நாட்களில் பலன் கிடைத்து உள்ளது.  இப்போது 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் ஆற்றில் தண்ணீர் நிரம்பி செல்கிறது. ஆற்றில் காணப்பட்ட துர்நாற்றம் போய்விட்டது. இப்போது கிராம குழந்தைகள் ஆற்றின் ஓரத்தில் இருக்கும் பச்சை பசும் புற்கள் மீது விளையாட தொடங்கி விட்டார்கள், ஆறு 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையை பெற தொடங்கி விட்டது.

கிராமத்தை சேர்ந்த 55 வயது டிரைவர் ராஜீவன் பேசுகையில், “குட்டேம்பெரூர் நதி இனி மீண்டும் சுத்தமான நீருடன் பாயும் என நான் நினைக்கவில்லை,” என ஆச்சரியத்துடன் பேசி உள்ளார்.

ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த கீதா பேசுகையில், “இது மிகவும் எளிதான பணி கிடையாது. ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பெண்கள் பலர் எப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவர் எடுத்து கூறினார். மீண்டும் வறட்சி என்ற நிலையை மாற்ற நீண்ட கால நீர் பற்றாக்குறை தீர்க்க அவர்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு பணியில் ஈடுபட்டனர். எனக்கு டெங்கு காய்ச்சல் கூட ஏற்பட்டது. ஆனால் நான் உடல் நலம் பெற்றதும் மீண்டும் ஆற்றை சுத்தம் செய்யும் பணிக்கு திரும்பிவிட்டேன்,” என்றார்.

குட்டேம்பெரூர் ஆறானது பாம்பா மற்றும் அச்சன்கோயில் ஆறுகளை இணைக்கும் ஒரு துணைநதியாகும். ஆனால் இப்பகுதியில் வாழும் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது குட்டேம்பெரூர் நதியாகும். பூதனூர் பஞ்சாயத்து தலைவர் பி விஸ்வாம்பேரா பேசுகையில், “எப்போது தண்ணீர் பற்றாக்குறையானது தலைவிரித்தாட தொடங்கியதோ, அப்போது ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். முதலில் நாங்கள் பணியை தொடங்க இருந்தபோது இது பணத்தை செலவு செய்யும் பயன் அளிக்காத திட்டம் என்றே எல்லோரும் கூறினார்கள், ஆனால் அவர்களுடைய பேச்சை எல்லாம் நாங்கள் பொய் ஆக்கிவிட்டோம்,” என கூறிஉள்ளார் மகிழ்ச்சியுடன்.

90களில் சுமார் 120 அடி அளவு விரிவாக சென்ற ஆறு இப்போது எப்படி 20 அடியானது என்பது குறித்தும் உள்ளூர் மக்கள் பேசிஉள்ளனர்.   சட்டவிரோதமான மணல் குவாரிகள், கழிவு நீர்கலப்பு, கட்டிட கழிவுகள் போன்றவற்றால் தன்னுடைய அழகான இயல்பை இழந்து காட்சியளித்தது. மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின்படி கடந்த பிப்ரவரி மாதம் ஆற்றை சுத்தம் செய்யும் பணியானது தொடங்கி உள்ளது.

முதலில் ஆற்றில் காணப்பட்ட செடிகள், பாசிகள் அகற்றப்பட்டன, பின்னர் ஆற்று பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன. பின்னர் ஆற்றை தூர்வாரி கழிவுகள் வெளியே அகற்றப்பட்டன. பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டன. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்ட ஆர்வலர் சனால் குமார் பேசுகையில், “ஆற்றில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டதும், தேங்கிய தண்ணீர் செல்ல தொடங்கியது. பெண்கள் இது சம்பளம் பெரும் ஒரு தொழிலாக எண்ணி பணியாற்றவில்லை. ஓர் உயிர்நாடியை புதுப்பிக்க வேண்டும் என பணியாற்றினர்,” என்றார். சுமார் 700 கிராமங்களை சேர்ந்த மக்கள் தாமாக முன்வந்து மாசுக்களை அகற்றி ஆற்றில் இப்போது நல்ல தண்ணீர் செல்லும் வகையில் செய்து உள்ளனர். அவர்களுடைய நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

கிராம மக்கள் ஆற்றை உயிர்ப்பிக்க செய்து இருந்தாலும் பயணமானது நிறைவடையவில்லை என ஆர்வலர்கள் கூறுகின்றனர். மணல் மாபியாக்கள் கையில் இருந்து ஆற்றை காப்பாற்ற வேண்டியது என்பதும், இனியும் கழிவு கலக்கப்படாது என்பதை உறுதிசெய்வதும் மிகவும் சவால் நிறைந்தது என அவர்கள் கூறுகிறார்கள். இப்போது ஆற்றில் பரிசல் போக்குவரத்தும் செய்யப்படுகிறது. துணிவிருந்தால் வழிபிறக்கும் என்பது உதாரணமாக கிராம மக்கள் ஒன்றாக இணைந்து செய்து காட்டிஉள்ளனர் என அம்மாநில மந்திரி சுதாகரன் பாராட்டி உள்ளார்.

Next Story