சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் மீதான பிடிவாரண்டு ரத்து


சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் மீதான பிடிவாரண்டு ரத்து
x
தினத்தந்தி 26 Jun 2017 11:15 PM GMT (Updated: 26 Jun 2017 8:08 PM GMT)

சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் மீதான பிடிவாரண்டு ரத்து. கடும் எச்சரிக்கையுடன் டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி

சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவர் வி.கே.சக்சேனாவுக்கு எதிராக டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த 2000–ம் ஆண்டு ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதுபோல், மேதா பட்கருக்கு எதிராக வி.கே.சக்சேனா அதே கோர்ட்டில் 2 அவதூறு வழக்குகள் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் மேதா பட்கர் நீண்டகாலமாக ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனால், கடந்த மே 29–ந்தேதி, அவருக்கு எதிராக, ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டை கோர்ட்டு பிறப்பித்தது. அந்த வாரண்டை ரத்து செய்யக்கோரி, அதே கோர்ட்டில் மேதா பட்கர் மனுதாக்கல் செய்தார்.

மாஜிஸ்திரேட்டு விக்ராந்த் வைட் முன்பு நேற்று அம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் உள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்டும், வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையை கருதியும் பிடிவாரண்டு ரத்து செய்யப்படுவதாக மாஜிஸ்திரேட்டு கூறினார்.

அதே சமயத்தில், எதிர்காலத்தில் மேதா பட்கர் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார். அவதூறு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்டு 3–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story