பாராளுமன்றத்தில் 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட், அமளியால் அவை ஒத்திவைப்பு


பாராளுமன்றத்தில் 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட், அமளியால் அவை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 July 2017 9:41 AM GMT (Updated: 24 July 2017 9:41 AM GMT)

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்தார்.



புதுடெல்லி,

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் கும்பல் தாக்குதல் நடைபெறும் விவகாரத்தை இன்று காங்கிரஸ் மக்களவையில் எழுப்பியது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே கும்பல் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது, ஆனால் மறுக்கப்பட்டது. இதனையடுத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதியாக இருக்க கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதி அடையவில்லை.

இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த நோட்டீஸ் வழங்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சவுகதா ராயும் இப்பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என குரல் எழுப்பினார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கும்பல் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுப்பெற்று கடும் அமளி ஏற்பட்டது. பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஆனந்த் குமார் இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அருண் ஜெட்லி பேசிஉள்ளார், இதுபோன்ற தாக்குதலுக்கு அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது என்றார். 

இவ்விவகாரம் தொடர்பாக எங்களை பேசவிட அனுமதிப்பது கிடையாது என எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதியில் வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் பேப்பர்களை கிழித்து வீசினர். இதனையடுத்து அவையை 2 மணிவரையில் ஒத்திவைத்தார் சுமித்ரா மகாஜன். பூஜ்ஜிய நேரத்தில் அவையில் பேப்பர்களை கிழித்து வீசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகாய், சுஷ்மிதா தேவ், ரஞ்ஜீத் ராஜன், அதிர் சவுதாரி, கே சுரேஷ் மற்றும் எம்.கே. ராகவன் ஆகியோர் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தார் சுமித்ரா மகாஜன். பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் எழுப்பட்டது. இதனால் அவையில் அமளி ஏற்பட்டது, அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.க்களை சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்வது இது முதல்முறையானது கிடையாது.

கடந்த 2015ல் ஜூலையிலும் அவையில் இடையூறு செய்வதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 25 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story