காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு பாரபட்சமானது சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா வாதம்


காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு பாரபட்சமானது சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா வாதம்
x
தினத்தந்தி 25 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-26T01:06:28+05:30)

அடிப்படை தேவைகளை கருத்தில் கொள்ளாத காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு பாரபட்சமானது என்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கர்நாடகா வாதம் செய்தது.

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11–ந் தேதி தொடங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 7–வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

இதுவரை கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடி வருகின்றனர்.

நேற்று கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ஷியாம் திவான் வாதாடியபோது கூறியதாவது:–

காவிரி நடுவர் மன்றம் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே முறையான நீர் பங்கீட்டை செய்யவில்லை. நடுவர் மன்றத்தின் நீர் பங்கீடு எந்த வகையிலும் கர்நாடகாவின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொள்ளவில்லை. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டிய அவசியம் கர்நாடக அரசுக்கு இருப்பதை பற்றிய முக்கியமான பிரச்சினையை இந்த தீர்ப்பு கருத்தில் கொள்ளவில்லை.

மிகவும் பாரபட்சமான முறையில் அமைந்துள்ளது. தமிழகத்துக்கு மட்டுமே பயன் அளிக்கும் வகையிலும், கர்நாடக மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும் அமைந்துள்ளது.

உதாரணத்துக்கு முதல் குறுவை சாகுபடிக்கு தமிழ்நாட்டுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யும் அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல இரண்டாவது குறுவை சாகுபடிக்கும் தமிழகத்துக்கு அதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா மாநிலத்துக்கு இரண்டாவது குறுவை சாகுபடிக்கு தண்ணீர் போதுமான அளவில் அனுமதிக்கப்படவில்லை. இது மிகவும் பாரபட்சமானது.

கீழ்படுகையில் உள்ளதால் அனைத்து பலன்களும் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தண்ணீரை நியாயப்படி பங்கீடு செய்வது மட்டுமே நியாயத்தை நிலைநாட்டும் செயலாக அமையும்.

இவ்வாறு ஷியாம் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

கர்நாடகாவுக்கு வாதங்களை முன்வைக்க இன்று (புதன்கிழமை) 1 மணி நேரம் அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்பிறகு கர்நாடகா தரப்பு வாதங்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கேரளா தரப்பில் வாதாட 1½ நாட்கள் அளிக்கப்படும்.

காவிரி வழக்கு வாரத்தில் 3 நாட்கள் (செவ்வாய், புதன், வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேற்றோடு கர்நாடகா 7 நாட்களாக வாதங்களை முன்வைத்துள்ளது. இறுதி விசாரணை நடக்கும் மொத்தம் 15 நாட்களில் 6 நாட்கள் கர்நாடகாவுக்கும், 6 நாட்கள் தமிழ்நாட்டுக்கும், மீதி 3 நாட்கள் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் துவக்கத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது கர்நாடகா ஒரு நாள் கூடுதலாக எடுத்துக் கொண்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கோர்ட்டில் உள்ள பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை உன்னிப்பாக கவனித்தனர்.


Next Story