டெல்லியில் விவசாயிகள் ரோட்டில் உருண்டு போராட்டம்


டெல்லியில் விவசாயிகள் ரோட்டில் உருண்டு போராட்டம்
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-27T01:24:46+05:30)

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று ரோட்டில் உருண்டு போராட்டம் நடத்தினார்கள்.

புதுடெல்லி,

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 2–வது கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 16–ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 11–வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று 4 விவசாயிகள் ரோட்டில் உருண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற விவசாயிகள் அவர்களை பின்தொடர்ந்து, ‘மோடி அய்யா விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்கய்யா’ என்பது போன்ற கோ‌ஷங்களை எழுப்பியபடி சென்றனர். இவர்கள் சுமார் 150 மீட்டர் தொலைவில் கேரள அரசு இல்லம் அருகே அமைக்கப்பட்டுள்ள போலீஸ் தடுப்பு வேலி வரை சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து மீண்டும் போராட்டகளத்துக்கு திரும்பினார்கள்.

அப்போது, போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:–

பிரதமர் மோடி இந்திய குடிமக்களை தலைநிமிர வைப்பேன் என்று சொன்னார். ஆனால் இன்று விவசாயிகள் ரோட்டில் நடக்க முடியாமல் உருண்டு செல்லும் நிலைக்கு வைத்து விட்டார்.

எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மத்திய அரசு மறுக்கிறது. எனவே எங்கள் போராட்டம் தொடரும். இன்று (நேற்று) எங்களுடன் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story