சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி ரூபாவுக்கு டி.ஜி.பி. வக்கீல் நோட்டீசு அனுப்பினார்


சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய பெண் அதிகாரி ரூபாவுக்கு டி.ஜி.பி. வக்கீல் நோட்டீசு அனுப்பினார்
x
தினத்தந்தி 26 July 2017 10:17 PM GMT (Updated: 26 July 2017 10:17 PM GMT)

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் உள்பட பெங்களூரு சிறை முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த டி.ஐ.ஜி. ரூபாவுக்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

பெங்களூரு,

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் உள்பட பெங்களூரு சிறை முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த டி.ஐ.ஜி. ரூபாவுக்கு சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். அதில் 3 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாகவும் டி.ஐ.ஜி. ரூபா அதிரடியாக அறிக்கை வழங்கினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா தொடர்பாக வீடியோ காட்சிகளும் வெளியாயின. இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழுவின் விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சட்ட விரோதமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் கீழ்மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிறைத்துறை மேல் அதிகாரிக்கு மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பியது தற்போது வெளியாகி பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட முறைகேடுகளை துணிச்சலாக அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு கட்டாய விடுமுறையில் உள்ள சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ஒரு வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார். அவரது சார்பில் வக்கீல் ஆர்.ரமேஷ் என்பவர் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:–

‘‘தாங்கள் ஊடகங்கள் மூலம் எனது கட்சிக்காரரான சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டு அவருடைய நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவர் வருகிற 31–ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவர் போலீஸ் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த ஒழுக்கத்துடன் பணியாற்றியுள்ளார்.

மலிவான விளம்பரத்துக்காக தாங்கள் இவ்வாறு தவறான தகவல்களை வெளியிட்டு உள்ளீர்கள். எனது கட்சிக்காரர் உங்களுக்கு ‘மெமோ‘ அனுப்பிய பிறகு இவ்வாறு தாங்கள் செயல்பட்டு உள்ளீர்கள். தாங்கள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. தாங்கள் சிறையில் சம்பந்தப்பட்ட தண்டனை கைதி(சசிகலா) அடைக்கப்பட்டுள்ள பகுதியில் நேரில் ஆய்வு செய்யவே இல்லை என்று என் கட்சிக்காரர் கூறுகிறார்.

எனது கட்சிக்காரர் சிறந்த சேவைக்காக ஜனாதிபதி பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். சி.பி.ஐ. அமைப்பிலும் அதிகாரியாக பணியாற்றியவர். கர்நாடகத்தில் லோக் அயுக்தாவில் சிறப்பான முறையில் செயலாற்றினார். ‘மெமோ‘ அனுப்பியதால் அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் எனது கட்சிக்காரரின் புகழை களங்கப்படுத்தி உள்ளீர்கள்.

எனவே, தாங்கள் எவ்வாறு ஊடகங்கள் மூலம் எனது கட்சிக்காரருக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டீர்களோ அதேபோல் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் மூட்டைகள் என்பதை உயர்மட்ட விசாரணை குழு அதிகாரியிடமும் கூறுவோம். அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்வோம்.

உயர்மட்ட குழுவின் விசாரணை முடியும்வரை அமைதியாக இருக்கலாம் என்று எனது கட்சிக்காரர் கருதினார். ஆனால் தாங்கள் இந்த வி‌ஷயத்தில் குற்றம் சுமத்துவதை தினசரி நடவடிக்கையாக மாற்றிக் கொண்டு உள்ளீர்கள். கர்நாடகத்தில் தற்போது பணியாற்றும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் எனது கட்சிக்காரரிடம் பயிற்சி பெற்றவர்கள்.

சிறையில் உள்ள கைதிகளின் நலனுக்காக எனது கட்சிக்காரர் பல்வேறு புதுமையான நடவடிக்கைகளை எடுத்தார். தண்டனை காலத்தை நிறைவு செய்து சிறையில் இருந்து வெளியே செல்லும் கைதிகள், சமுதாயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘ரூபந்தரா‘ என்ற திட்டத்தை செயல்படுத்தினார். தவறுகளை தடுப்பதற்காக அவருடைய முயற்சியின் காரணமாக கர்நாடகத்தில் அனைத்து சிறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தாங்கள் மக்களிடையே விளம்பரத்தை பெற ஆர்வமாக செயல்பட்டு வருகிறீர்கள். இதற்காக மற்றவர்களை பலிகடா ஆக்குகிறீர்கள். கடந்த 12–ந் தேதி அறிக்கை கொடுத்ததாக சொன்னீர்கள். அன்றைய தினமே அந்த அறிக்கை ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. இதன் பின்னணியில் தாங்கள் விளம்பரம் தேடுவது தான் முக்கியமான நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

சிறையில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு தனி சமையலறை வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருக்கிறீர்கள். அந்த ஆட்சேபனைக்குரிய வி‌ஷயங்களை நீங்கள் புகைப்படம் எடுப்பதை எப்படி தவறவிட்டீர்கள்? இப்போது ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறீர்கள்.

ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி உள்ளீர்கள். அந்த பணம் யார் கொடுத்தது, எங்கிருந்து வந்தது என்பது போன்ற வி‌ஷயங்கள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறையில் எனது கட்சிக்காரர் புகார் செய்ய உள்ளார். ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் தாங்கள் சில நோக்கத்திற்காக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரருக்கு எதிராக கூறி இருக்கிறீர்கள்.

எனவே தாங்கள் மன்னிப்பு கேட்பதால் எனது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கிவிடாது. ஆயினும் 3 நாட்களுக்குள் தாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் மீது ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும்.’’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story