மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 22 Aug 2017 10:30 PM GMT (Updated: 22 Aug 2017 8:12 PM GMT)

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும் கலந்தாய்வு நாளை தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

புதுடெல்லி,

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 4–ந் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இன்று (புதன்கிழமை) ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். 24–ந் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வை தொடங்கி, 25–ந் தேதி முதல் ரெகுலர் கலந்தாய்வை தொடர ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மாநில ஒதுக்கீட்டில் உள்ள மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலும் இன்று வெளியிடப்படும். வருகிற 4–ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பல் மருத்துவ கலந்தாய்வை செப்டம்பர் 10–ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் காலஅவகாசம் கேட்போம்.

நீட் தேர்வு முடிவின் அடிப்படையிலேயே அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 3,536 மருத்துவ இடங்களும், 100 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. மேலும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. இதில் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445 இடங்கள் இருக்கிறது. மீதம் உள்ள இடங்கள் அரசு ஒப்பளித்த தனியார் கல்லூரி இடங்கள் ஆகும்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காக 2,653 மருத்துவ இடங்களை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கேட்டிருந்தோம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அவசர சட்டம் ஏற்றுக்கொள்ளப்படாததால், கூடுதல் இடங்கள் தொடர்பான வாதத்துக்கு இடமில்லாமல் போய்விட்டது.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ இடம் கிடைத்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், மற்ற மாணவர்களுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். இந்த வி‌ஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தாழ்மையுடன் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story