‘நியூட்டன்’ திரைப்படம் 2018 ஆம் ஆண்டு ஆஸ்காருக்கு தேர்வானது


‘நியூட்டன்’ திரைப்படம் 2018 ஆம் ஆண்டு ஆஸ்காருக்கு தேர்வானது
x
தினத்தந்தி 22 Sep 2017 9:12 AM GMT (Updated: 22 Sep 2017 9:30 AM GMT)

அரசியல் நையாண்டி திரைப்படமான ‘நியூட்டன்’ (இந்தி) 2018 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மும்பை

இப்படத்தை அமித் மசூர்கர் இயக்கியுள்ளார். இவருக்கு இது இரண்டாவது படமாகும். கடந்த 2014 ஆம் ஆண்டில் ‘சுலேமானி கீடா’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இப்படம் 2018 ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எனும் தகவலை தெலுங்குப்பட தயாரிப்பாளர் சி வி ரெட்டி தெரிவித்தார். ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தேர்வுக்கமிட்டியின் ஒருமித்தத் தேர்வாகும் என்று அவர் கூறினார். இவ்வாண்டு தேர்வில் கலந்து கொண்ட 26 படங்களில் ‘நியூட்டன்’ அதிகார்பூர்வமாக ஆஸ்காரில் பங்கு கொள்ளும் என்று கூறினார் அந்த அமைப்பின் பொதுச் செயலர் சுரான் சென் கூறினார்.

இது பற்றி ராஜ்குமார் ராவ் கூறுகையில் இத்தேர்வு தனக்கு பெருமிதம் அளிப்பதாக உள்ளது என்றார். ”உண்மையிலேயே இது நேர்மையான படம்; இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எங்களுடைய முழு சக்தியையும் இப்படத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்படுத்துவோம்” என்றார் ராஜ்குமார் ராவ்.

”இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகிறது. அதே சமயத்தில் ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது” என்றார் இயக்குநர் மசூர்கர். 

படமானது நக்சலைட் மோதல் மிகுந்த சத்திஸ்கர் பகுதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முயலும் நேர்மையான தேர்தல் அதிகாரியின் நிலைமையை அரசியல் நையாண்டியோடு விவரிக்கிறது. இப்படத்தில் பிரபல நடிகர்களான பங்கஜ் திரிபாதி, ரகுபீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் ஆகியோரும் நடித்துள்ளனர்.


Next Story