பலாத்கார சாமியார் குர்மீத் சிங் 20 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு


பலாத்கார சாமியார் குர்மீத் சிங் 20 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
x
தினத்தந்தி 25 Sep 2017 2:21 PM GMT (Updated: 2017-09-25T19:50:53+05:30)

பலாத்கார சாமியார் குர்மீத் சிங் 20 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.


சண்டிகார்,  

இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ரோதக் மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 28-ம் தேதி  தண்டனை வழங்கப்பட்ட போது கோர்ட்டு அறையின் உள்ளேயும், வெளியேயும் பெரும் நாடகத்தை நடத்தினார் குர்மீத் சிங்.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜக்தீப் சர்மா “குற்றவாளி (குர்மீத் சிங்), தன்னை கடவுள் என்று பின்பற்றிய பக்தர்களை கூட விடவில்லை. மனிதநேயம் பற்றி கவலை கொள்ளவில்லை. குற்றவாளியிடம் இயற்கையாகவே கருணை என்பது கிடையாது. இது அவருடைய நடவடிக்கையின் மூலமே தெரிகிறது. இதுபோன்ற குற்றவாளி நீதிமன்றத்தில் இருந்து எந்தஒரு கருணையும் எதிர்பார்க்க கூடாது. குற்றவாளி மிகவும் கொடிய மிருகத்தைபோன்று நடந்துக் கொண்டு உள்ளார், எந்தஒரு கருணையும் கிடையாது,”என கூறிவிட்டார். சிறையில் எந்தஒரு சிறப்பு வசதியும் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சிறையில் சாமியார் குர்மீத் சிங்கிற்கு விஐபி வசதிகள் எதுவும் கிடையாது, மற்ற கைதிகளை போன்றே சாமியாரும் நடத்தப்படுகிறார் என பிற கைதிகளும் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து குர்மீத் சிங் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ‘பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்களின் வாக்குமூலங்களை 6 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகுதான் சி.பி.ஐ. பதிவு செய்தது. வாக்குமூலத்தின் சில பகுதிகளை மறைத்து விட்டது. இதுபோன்ற தவறுகள் இருப்பதால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story