தமிழக தேர்தல் அதிகாரி டெல்லி பயணம்; தேர்தல் கமிஷனருடன் ஆலோசனை


தமிழக தேர்தல் அதிகாரி டெல்லி பயணம்; தேர்தல் கமிஷனருடன் ஆலோசனை
x
தினத்தந்தி 29 Oct 2017 12:15 AM GMT (Updated: 28 Oct 2017 8:17 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிப்பது பற்றி ஆலோசிக்க, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றார். அங்கு அவர் தேர்தல் கமிஷனரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியின் உறுப்பினராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் அ.தி. மு.க. இரண்டாக பிளவுபட்ட நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது அ.தி.மு.க. வின் சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பில் இ.மதுசூதனனும் போட்டியிட்டனர். மேலும், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் களம் இறக்கப்பட்டதுடன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தேர்தலில் போட்டியிட்டார்.

இதனால் பலமுனை போட்டி நிலவிய சூழ்நிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக, பிரசாரம் ஓய்வதற்கு முந்தைய நாள் (ஏப்ரல் 9-ந் தேதி) ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்தது.

அதன்பிறகு, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்தி முடிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், அந்த தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றார்.

அங்கு அவர், தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடும் தேதி பற்றி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அப்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் குறித்தும், அவற்றை நீக்குவதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், இதுதொடர்பாக தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் பதில் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராஜேஷ் லக்கானி, தேர்தல் கமிஷனருடனும் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

Next Story