இந்தியாவுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை சி.பி.ஐ.க்கு, மெகுல் சோக்சி பதில்


இந்தியாவுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை சி.பி.ஐ.க்கு, மெகுல் சோக்சி பதில்
x
தினத்தந்தி 8 March 2018 11:15 PM GMT (Updated: 8 March 2018 8:05 PM GMT)

இந்தியாவுக்கு திரும்பி வர வாய்ப்பு இல்லை என்று சி.பி.ஐ.க்கு மெகுல் சோக்சி பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தற்போது இருவரும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா திரும்பி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற மெகுல் சோக்சிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதற்கு இ–மெயிலில் மெகுல் சோக்சி அளித்த பதிலில் கூறியதாவது:–

என்னுடைய பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் எனக்கு இதயம், கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்தியா வந்து நான் கைது செய்யப்பட்டால், அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சையை பெற முடியாது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்க மாட்டீர்கள்.

மேலும் என் சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதால் என்னுடைய ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறேன். இதனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்த காரணங்களால் நான் இந்தியாவுக்கு திருப்பி வர வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story