சொந்த வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் குடியேறினார் மாணிக் சர்க்கார்


சொந்த வீடு இல்லாததால் கட்சி அலுவலகத்தில் குடியேறினார் மாணிக் சர்க்கார்
x
தினத்தந்தி 8 March 2018 11:30 PM GMT (Updated: 8 March 2018 8:09 PM GMT)

திரிபுரா மாநிலத்தில் 20 ஆண்டுகளாக முதல்–மந்திரியாக பதவி வகித்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாணிக் சர்க்கார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அங்கு ஆட்சியை பிடித்தது.

அகார்தலா,

முதல்–மந்திரி பதவியை மாணிக் சர்க்கார் ராஜினாமா செய்தார். அதன் பிறகு உடனடியாக அரசு வீட்டையும் அவர் காலி செய்தார். அவருக்கு சொந்த வீடு இல்லாததால் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தன் மனைவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தற்போது தங்கி உள்ளார்.

இது குறித்து கட்சியின் அலுவலக செயலாளர் ஹரிபிரதா தாஸ் கூறுகையில், மாணிக் சர்க்கார் தன் மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் இருக்கும் விருந்தினர் அறையில் தங்க இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள சமையல் அறையில் அவர்கள் விரும்பியதை சமைத்து சாப்பிட்டு கொள்ளலாம். புதிய அரசு வீடு ஒதுக்கினால் அங்கு அவர் செல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.

நாட்டிலேயே சொந்த வீடு இல்லாத மிகவும் எளிமையான முதல்–மந்திரியாக இருந்தவர் மாணிக் சர்க்கார். அவருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story