பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன? : ரிசர்வ் வங்கி விளக்கம்


பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன? : ரிசர்வ் வங்கி விளக்கம்
x
தினத்தந்தி 18 March 2018 10:30 PM GMT (Updated: 18 March 2018 8:15 PM GMT)

பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன? என மத்திய ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

புதுடெல்லி,

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி, மத்திய அரசு அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இப்படி மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டு, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்தவகையில் ரூ.15.28 லட்சம் கோடி மதிப்பிலான மேற்படி நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த நோட்டுகள் எண்ணும் பணி நடந்து வருவதாகவும் அப்போது கூறியது.

இவ்வாறு ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ள நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன? என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, மேற்படி நோட்டுகள் எண்ணப்பட்டு, அதன் உண்மைத்தன்மை (கள்ள நோட்டு) குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் 59 நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அவற்றை பாளங்களாக மாற்றி வெளியேற்றி வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


Next Story