ஆருஷி கொலை வழக்கு: தல்வார் தம்பதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


ஆருஷி கொலை வழக்கு:  தல்வார் தம்பதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 19 March 2018 10:26 AM GMT (Updated: 19 March 2018 10:26 AM GMT)

ஆருஷி கொலை வழக்கில் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தம்பதி மீது வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி வழங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SupremeCourtofIndia

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் குடியிருப்பு ஒன்றில் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் என்ற பல் மருத்துவ தம்பதியின் 14 வயது மகளான ஆருஷி கடந்த 2008ம் ஆண்டு மே மாதத்தில் படுகொலை செய்யப்பட்டார்.  இதன் பின்னணியில் பணியாளரான ஹேம்ராஜ் (வயது 45) இருக்க கூடும் என சந்தேகம் எழுந்தது.

ஆனால் 2 நாட்களில் ஹேம்ராஜும் வீட்டின் முன்பகுதியில் கொல்லப்பட்டு கிடந்துள்ளார்.  இதுபற்றி உத்தர பிரதேச போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தீர்வு எட்டப்படாத நிலையில், சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்தது.  இதில், கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தம்பதியை குற்றவாளிகள் என அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஆனால், கடந்த வருடம் அக்டோபர் 12ந்தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம், சமர்ப்பிக்கப்பட்ட ஆவண சான்று அடிப்படையில் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தம்பதியை குற்றவாளி என கூற முடியாது என தெரிவித்து அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில், ஹேம்ராஜின் மனைவி கும்கலா பஞ்ஜாடே கடந்த வருடம் டிசம்பரில் தல்வார் தம்பதி விடுதலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.  இதேபோன்று சி.பி.ஐ.யும் மேல்முறையீடு செய்தது.

நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, மேல்முறையீடு வழக்கை இன்று அனுமதித்து உள்ளதுடன் தல்வார் தம்பதிக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளது.


Next Story