மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு, கூட்டாட்சி முன்னணியை அமைக்க பணி மேற்கொள்ளப்படுகிறது


மம்தா பானர்ஜியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு, கூட்டாட்சி முன்னணியை அமைக்க பணி மேற்கொள்ளப்படுகிறது
x
தினத்தந்தி 19 March 2018 1:45 PM GMT (Updated: 19 March 2018 1:45 PM GMT)

கூட்டாட்சி முன்னணியை அமைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என சந்திரசேகர ராவ் பேசிஉள்ளார். #ChandrashekharRao #MamataBanerjee


கொல்கத்தா, 

தெலுங்கானா மாநில முதல்&மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் கொல்கத்தாவில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக சந்திரசேகர ராவ் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

 இதற்கிடையே மூன்றாவது அணி அமைப்பு என்பது பா.ஜனதாவிற்கு சாதகமாக அமையும் என்ற கருத்துக்களும் எதிர்க்கட்சிகள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியை சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். 

“2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மூன்றாவது கூட்டணி இருக்கும் என மக்கள் நினைக்கிறார்கள். இந்த கூட்டணியானது இந்திய மக்களுக்காக இருக்கும் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். இது சில அரசியல் கட்சிகளின் இணைப்பாக இருக்காது, இது மக்களின் கூட்டணியாக இருக்கும். மூன்றாவது அணிக்கான தேவை உள்ளது. ஒரு கூட்டாட்சி முன்னணியை அமைக்கும் பணியில் நாங்கள் தீவிரமாக இறங்கி உள்ளோம்,” என்றார் சந்திரசேகர் ராவ். 

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், “மக்களின் பல்வேறு பிரச்னைகளின் போது ஏற்படும் சூழ்நிலையில் அரசியல் நிலை மாறுபடுகிறது. தெலங்கானா முதல்வருடனான சந்திப்பு ஒரு தொடக்கம் மட்டுமே,” என்றார். தேசத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவே ஆலோசித்தோம் எனவும் குறிப்பிட்டார். பாரதீய ஜனதா கூட்டணிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரளவேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story